ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் படுகொலையை விசாரிக்க ஆணையம்

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் படுகொலையை விசாரிக்க ஆணையம்

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்தால், பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்தால், பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
 மேலும், காஷ்மீரில் அரசியல் பிரச்னை நிலவுகிறது; அதற்கு தீர்வு காண காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிக்கு வந்தால், 2016-ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னதாக பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஆணையம் அமைப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
 அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
 எங்கள் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா, விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து ஏற்கெனவே கேட்டு விட்டார். வரும் தேர்தலில், எந்த ஒரு கட்சியின் துணையுமின்றி தனிப்பெரும்பான்மையாக எங்கள் கட்சி வெற்றி பெற இறைவன் வழிவகுப்பார் என்று நம்புகிறேன். அவ்வாறு நடைபெற்றதும், ஆட்சியேற்ற முதல் நாளிலேயே விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடுவோம். அதன் மூலம் உண்மையில் காஷ்மீரில் என்ன நடைபெற்றது என்பதை உலக மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறினார்.
 காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் கொல்லும் வகையில் பாதுகாப்பு படையினர் கொண்டு வந்த "ஆபரேஷன் ஆல் அவுட்' குறித்த கேள்விக்கு, "அடக்குமுறை சட்டத்தை எங்கள் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. மக்கள் அவர்களது சொந்த ஊரிலேயே துன்புறுத்தப்படுவதை ஆதரிக்க மாட்டோம்' என்றார்.
 முன்னதாக, கட்சி நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "மக்களுக்கு தொந்தரவுகள் அளிப்பதன் மூலம் அவர்களை வென்று விட முடியாது. காஷ்மீரை அரசியல் பிரச்னையாக கருதி இந்தியா காஷ்மீரில் உள்ள அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும் இந்தியா, காஷ்மீருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்மூலமாக மட்டுமே காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண இயலும். இதற்கு முன்னர், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவ்வாறு முயற்சி செய்தார். அதன் பிறகு அதை யாரும் பின்பற்றவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் அரசு அதை செய்யும் என
 நம்புகிறேன்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com