புதிதாக 10,000 பெட்ரோல் நிலையங்கள்: மத்திய அரசுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ராஜஸ்தானில், புதிதாக 10,000 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கும் முடிவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் 3 எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என்று

ராஜஸ்தானில், புதிதாக 10,000 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கும் முடிவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் 3 எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என்று அந்த மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
 மாநிலம் முழுவதும் 10,000 புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரி, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டன.
 இவ்வாறு அதிகப்படியான எண்ணிக்கையில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும்போது, முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறி, பீர்பல் ராம் என்பவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 அந்த மனுவில், "ஒரே நேரத்தில் இவ்வாறு அதிகப்படியான எண்ணிக்கையில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்க வேண்டிய அவசியமில்லை. அரசியல் ஆதாயம் தேடியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, தற்போது செயல்பாட்டிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களின் வருவாயை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரதீப் நட்ரஜாக், நீதிபதி பி.எஸ்.பாடி ஆகியோர் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குல்தீப் மாத்துர், ""பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைப்பது குறித்தான அறிவிக்கை வெளியிடுவதற்கு முன், தற்போது செயல்பாட்டிலுள்ள விற்பனை நிலையங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடாமல், பெட்ரோலிய நிறுவனங்கள் சட்டத்துக்குப் புறம்பான முறையில் அறிவிக்கையை வெளியிட்டுள்ளன'' என்று வாதிட்டார்.
 இதனைக் கேட்ட நீதிபதிகள், ""இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசு, அறிவிக்கை வெளியிட்ட 3 எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவை பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com