மருத்துவ பரிசோதனை: அமெரிக்காவுக்கு ஜேட்லி திடீர் பயணம்

மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு திடீர் பயணமாக சென்றுள்ளார்.
மருத்துவ பரிசோதனை: அமெரிக்காவுக்கு ஜேட்லி திடீர் பயணம்


மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு திடீர் பயணமாக சென்றுள்ளார்.
66 வயதாகும் ஜேட்லிக்கு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு திடீரென அவர் புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், வழக்கமான பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்; வார இறுதியில் அவர் நாடு திரும்புவார் என்றன.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தபிறகு, ஜேட்லி வெளிநாடு பயணம் செல்வது இதுவே முதல்முறையாகும். அமெரிக்காவுக்கு ஜேட்லி சென்றிருப்பதால், டாவோஸில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அருண் ஜேட்லி விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், அருண் ஜேட்லிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை கேள்விப்பட்டு வருத்தமடைந்துள்ளோம். அவர் சார்ந்த சித்தாந்தத்தை எதிர்த்து நாள்தோறும் நாங்கள் போராடி வருகிறோம். இருப்பினும், ஜேட்லி விரைவில் குணமடைய காங்கிரஸ் கட்சியும், நானும் அன்பு கலந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். இக்கட்டான இந்தத் தருணத்தில், அருண் ஜேட்லிக்கும், அவரது குடும்பத்துக்கும் நாங்கள் 100 சதவீதம் உறுதுணையாக இருப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவுகளில், விரைவில் அவர் முழு உடல்நலத்துடன் நாடு திரும்புவதை காண்போம் என்று நம்புகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com