விவேகானந்த கேந்திரத்துக்கு அமைதிக்கான காந்தி விருது

கடந்த 2015 முதலான 3 ஆண்டுகளுக்கு, அமைதிக்கான காந்தி விருதை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.


கடந்த 2015 முதலான 3 ஆண்டுகளுக்கு, அமைதிக்கான காந்தி விருதை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. இதில் 2015-ஆம் ஆண்டுக்கான விருது, கன்னியாகுமரியைச் சேர்ந்த விவேகானந்த கேந்திரத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான காந்தி விருது கடைசியாக 2014-ஆம் ஆண்டு இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு அந்த விருது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த விருது புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2015-ஆம் ஆண்டுக்கான, அமைதிக்கான காந்தி விருதை கன்னியாகுமரியை மையமாகக் கொண்டு செயல்படும் விவேகானந்த கேந்திரம் அமைப்பு பெறுகிறது. ஊரக மேம்பாடு மற்றும் கல்வித் துறையில் சிறந்த பணியாற்றியமைக்காக அந்த அமைப்பு விருதுக்கு தேர்வாகியுள்ளது.
2016-ஆம் ஆண்டு விருதை, அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை மற்றும் சுலப் இன்டர்நேஷனல் ஆகிய இரு அமைப்புகளும் பகிர்ந்து கொள்கின்றன. இதில் அக்ஷய பாத்திரம் அமைப்பு, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கி வருகிறது. மனித கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்தும் முறையை ஒழிக்க சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு பணியாற்றி வருகிறது.
ஊரக மற்றும் பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக செயலாற்றி வரும் ஏகாய் அபியான் அறக்கட்டளைக்கு 2017-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது. தொழுநோய் ஒழிப்புக்கு பங்களிப்பு செய்துவரும் யோஹெய் சசாகவா அமைப்புக்கு 2018-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான காந்தி விருது வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் அடங்கிய குழு இந்த விருது வழங்கும் முடிவை மேற்கொண்டது. மகாத்மா காந்தியின் 125-ஆவது பிறந்த தினத்தையொட்டி 1995 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு காந்திய வழியில் பங்களிப்பு செய்துவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அமைதிக்கான காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி வாழ்த்து: கடந்த 3 ஆண்டுகளுக்கான, அமைதிக்கான காந்தி விருது வென்ற அமைப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com