மக்களவைத் தேர்தல் தேதி குறித்து தவறான செய்தி: விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் என்று ஒரு பட்டியலை சமூகவலைதளங்களில் பரவவிட்டது யார்?


எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் என்று ஒரு பட்டியலை சமூகவலைதளங்களில் பரவவிட்டது யார்? என்பது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தில்லி நகர காவல் துறையினர் இந்த விசாரணையை மேற்கொள்ள இருக்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 
கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 7 முதல் மே 12-ஆம் தேதி வரை 9 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.
மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின. அதன்படி, மக்களவைத் தேர்தலை வரும் ஏப்ரல்-மே மாதங்களில் 9 முதல் 10 கட்டங்களாக நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய 7 மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் அரசுக்கு தேர்தல் நடத்தும் செலவும் வெகுவாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுட்டுரை, முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மக்களவைத் தேர்தல் அட்டவணை என்று பெயரில் ஒரு பட்டியல் வெளியானது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிப்பு வெளியிடாத நிலையில், தேர்தல் ஆணையத்தின் பெயரில் சமூகவலைதளங்களில் போலியான செய்தி வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரத்தைக் கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம் இந்த தவறான செய்தியை சமூகவலைதளங்களில் பரப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. 
இதையடுத்து, தில்லி காவல்துறையின் தகவல்தொழில்நுட்பப் பிரிவு களத்தில் இறங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com