நீரவ் மோடி, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவோம்: பிரகாஷ் ஜாவடேகர்

நிதி மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடிய தொழிலதிபர்கள் நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெஹூல் சோக்ஸி ஆகியோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதி
நீரவ் மோடி, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவோம்: பிரகாஷ் ஜாவடேகர்


நிதி மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடிய தொழிலதிபர்கள் நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெஹூல் சோக்ஸி ஆகியோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதி என்று மத்திய அமைசச்ர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
மத்தியில் முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கொடுத்த நிர்ப்பந்தத்தால்தான், நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெஹூல் சோக்ஸிக்கு எந்தவித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லாமல் வங்கிகள் கடன் கொடுத்தன. 
காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்த வரை, அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடவில்லை. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்பதை புரிந்து கொண்டு, அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடி விட்டனர்.
விஐபி ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல், நாடு கடத்தப்பட்டார். அதேபோல், நீரவ் மோடி, மல்லையா, மெஹூல் சோக்ஸி ஆகியோரும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகும். அவர்களுக்கு சொந்தமாக இந்தியா மற்றும் வெளிநாட்டில் இருக்கும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். வங்கியில் அவர்கள் மோசடி செய்த ஒவ்வொரு பைசாவும், அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.
மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவது நிச்சயம். முந்தைய மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, அதிக தொகுதிகளில் பாஜக வெல்லும். இந்தத் தேர்தலில் தோல்வியடைவது உறுதி என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியும். ஆதலால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி பேரணியில் அக்கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையையோ, குறைந்தபட்ச செயல் திட்டத்தையோ வெளியிடவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு தலைமை கிடையாது. தொலைநோக்கு திட்டமும் கிடையாது என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com