உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கு: லாலுவுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன்

உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கு: லாலுவுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன்

உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
கால்நடைத் தீவன வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பொதுவான ஜாமீன் கேட்டு லாலு பிரசாத் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த தில்லி சிறப்பு நீதிமன்றம், லாலு பிரசாத் உள்ளிட்டோரின் இடைக்கால ஜாமீனை, ஜனவரி 28 வரை நீட்டித்து உத்தரவிட்டார். பொதுவான ஜாமீன் குறித்து அன்றைய தினம் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அருண் பரத்வாஜ் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லாலு பிரசாத், அவரது மனைவி, மகன் உள்ளிட்டோருக்கு ரூ.1 லட்சம் உத்தரவாதத் தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கில் அவர்களுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
உணவக ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, சிபிஐ தொடுத்துள்ள வழக்கில், லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 19-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.
லாலு பிரசாத், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயின் ஐஆர்சிடிசிக்குச் சொந்தமான உணவகங்களை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ், ரயில்வே வாரிய இணை உறுப்பினர் பி.கே. அகர்வால், முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, அவரது மனைவி சரளா குப்தா, ஐஆர்சிடிசியின் அப்போதைய இயக்குநர்கள் பி.கே.கோயல், ராஜேஷ் சக்úஸனா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com