ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி: ராகுலின் மக்களவைத் தேர்தல் வாக்குறுதி

மத்தியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி: ராகுலின் மக்களவைத் தேர்தல் வாக்குறுதி

மத்தியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன.

விவசாயக் கடன் தள்ளுபடி: அண்மையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆவணங்களை ராகுல் காந்தி வழங்கினார்.

குறைந்தபட்ச வருவாய் உறுதி: மாநில முதல்வர் பூபேஷ் பகேல், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு இருவேறு இந்தியாவை உருவாக்க விரும்புகிறது. ஒன்று ரஃபேல் ஊழல், அனில் அம்பானி, நீரவ் மோடி, விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோருக்கானது. மற்றொன்று ஏழை, எளிய மக்களுக்கானது. வரும் மக்களவைத் தேர்தலின்போது இது தொடர்பாக நன்கு சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும். இதன் மூலம் அனைவருக்கும் குறைந்தபட்ச வருவாய் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதனால், நாட்டில் ஏழ்மை முழுமையாக ஒழிக்கப்படும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு: இது காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. இதனால் நாட்டில் யாரும் பட்டினியுடன் இருக்க மாட்டார்கள். நாட்டில் ஏழைகள் என்று யாரும் இல்லை என்ற நிலையை காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்குவோம் என்றார் அவர்.

"புதிய இந்தியாவை படைப்போம்': இது தொடர்பாக சுட்டுரையிலும் ராகுல் பதிவிட்டுள்ளார். அதில், "ஏழை மக்களின் நலவாழ்வும், மகிழ்ச்சியும்தான் எங்கள் கட்சியின் வாக்குறுதியும், நோக்கமுமாக உள்ளது. ஏழ்மையில் உள்ள பல லட்சம் சகோதர, சகோதரிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்று, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் புதிய இந்தியாவைப் படைப்போம்' என்று கூறியுள்ளார்.

வாக்குறுதியும், வெற்றியும்...: முன்னதாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தது. அப்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் வாக்குறுதி அளித்தார். அந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதிலும் சத்தீஸ்கரில் 90 தொகுதிகளில் 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்வைத்து குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தை ராகுல் காந்தி வாக்குறுதியாக அளித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திராவின் வழியில்...: கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் "வறுமையை ஒழிப்போம்' என்ற கோஷத்தை முன்வைத்து தேர்தலைச் சந்தித்த இந்திரா காந்தி வெற்றி பெற்றார். இப்போது அவரது பேரனான ராகுல் காந்தியும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். அது எந்த அளவுக்கு அவரது தேர்தல் வெற்றிக்கு உதவுகிறது என்பது மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

"திருப்புமுனை திட்டம்'    

ராகுலின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "இந்த அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. லட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த கடந்த 2004 முதல் 2014 வரை சுமார் 14 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டனர். இப்போது நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக வறுமையை ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம். குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம் தொடர்பாக காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் விரிவாக விளக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.

செயல்படுத்த முடியாத வாக்குறுதி      

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, செயல்படுத்த முடியாத வாக்குறுதியை அளித்துள்ளார் என்று பாஜக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

காங்கிரஸின் உண்மை முகமும், அதன் தேர்தல் விளையாட்டுகளும் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். மத்தியில் 58 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் கட்சி, தங்களால் செயல்படுத்த முடியாத நூற்றுக்கணக்கான வெற்று அறிவிப்புகளை வெளியிட்டது. தற்போது ராகுல் காந்தி அளித்துள்ள வாக்குறுதியும் அதுபோன்றதுதான். இதுபோன்ற திட்டத்தை அவர்கள் ஆட்சியிலிருந்தபோதே ஏன் நிறைவேற்றவில்லை?

ராஜஸ்தான், சத்தீஸ்கரில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எந்த வித முன்தயாரிப்போ, நிதி ஆதாரம் குறித்த ஆய்வோ இல்லாமல் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே ராகுல் காந்தி அளித்து வருகிறார் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com