மோடியின் தோல்வியை கட்கரியின் கருத்து வெளிக்காட்டுகிறது: தேசியவாத காங்கிரஸ்

"பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் உதை வாங்குவார்கள்' என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து, பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வியை

"பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் உதை வாங்குவார்கள்' என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து, பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வியை வெளிக்காட்டுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "சில அரசியல் தலைவர்கள் மக்களிடம் கனவுகளை விற்பனை செய்பவர்களாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களாகவும் உள்ளனர். அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், மக்களிடம் நிச்சயமாக உதை வாங்குவார்கள்' என்று பேசினார். ஏற்கெனவே, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தபோது, "வெற்றிக்கு தாங்கள்தான் காரணம் என்று பெருமை தேடிக் கொள்ளும் தலைவர்கள், தோல்விகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்' என்று கட்கரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது இந்த கருத்து தேசிய அளவில் மீண்டும் விவாதத்துக்குரிய விஷயமாக உள்ளது.
மும்பையில் திங்கள்கிழமை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது:
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மிகவும் வெளிப்படையாகப் பேசி வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடையப் போவது உறுதி என்பதும், தேர்தலுக்குப் பிறகு பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்காது என்பது இதன் மூலம் உறுதியாகிறது. தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு மாற்றாக கட்சியில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் உத்தியை கட்கரி கையில் எடுத்துள்ளார். அவரது கருத்துகள், மோடியின் தோல்விகளை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாகவே உள்ளது. பாஜகவில் இருந்தே, பிரதமர் மோடிக்கு எதிராக குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு, அக்கட்சியில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பதையே இது வெளிக்காட்டுகிறது என்றார் நவாப் மாலிக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com