காஷ்மீரில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் நேருவே காரணம்: அமித் ஷா

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார். 
காஷ்மீரில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் நேருவே காரணம்: அமித் ஷா


ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார். 

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீர்மானம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் பதிலளிக்கையில், 

"காஷ்மீர் இந்தியப் பகுதியின் ஒரு அங்கமாகும். அதை யாராலும் பிரித்து எடுத்துச் செல்ல முடியாது. காஷ்மீர் பாரம்பரியம், மனிதநேயம் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான கொள்கையையே மோடி அரசு பின்பற்றுகிறது. காஷ்மீரில் குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் நாங்கள் பள்ளிகளை திறந்துள்ளோம், சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம், கழிப்பறை கட்டியுள்ளோம், மின்சாரம் வழங்கியுள்ளோம். சுஃபி பாரம்பரியம், காஷ்மீர் பண்டிட்டுகள் ஆகியோரை அங்கிருந்து வெளியேற்றியது யார்? அவர்கள் காஷ்மீரின் பாரம்பரியம் இல்லையா?

காஷ்மீரில் எங்களுடைய அணுகுமுறை மிகத் தெளிவாக உள்ளது. இந்தியாவைப் பிரிக்க நினைப்பவர்களுக்கு அவர்களது மொழியிலேயே பதில் அளிக்கப்படும். 

அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் அதிகாரங்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் அதிகாரமான சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் தங்களுக்கு எதிரானவர்களின் மாநில அரசுகளை பலமுறை கலைத்துள்ளது. இந்திய ஜனநாயகம் மூன்று குடும்பங்களுக்கு மட்டும் உட்பட்டது கிடையாது. 

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்த முடியாது, காரணம் வாக்காளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது. தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டால், அதன்பிறகு அரசு ஒருநாள் கூட தாமதப்படுத்தாது. 

காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதி பாகிஸ்தானிடம் இருக்கும்போது போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு நேரு ஒப்புக்கொண்டது தான் அங்கு நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம். நேரு மீதான மக்கள் பார்வையை தவறாக வழிநடத்த அரசு நினைக்கவில்லை, ஆனால் வரலாற்றுப் பிழைகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்" என்றார். 

இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீர்மானம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது ஜூலை 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  

முன்னதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், "அரசை தில்லியில் இருந்து நடத்துவதை நிறுத்துங்கள். தேர்தலை நடத்துவதே, அங்கு மிகப் பெரிய நம்பிக்கை அளிக்கக்கூடிய நடவடிக்கையாக இருக்கும்" என்றார். அதேசமயம், எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து இரண்டு மடங்கு அதிகரித்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.       

இந்த தீர்மானத்துக்கு மக்களவை கடந்த 28-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com