ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்: நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்பு சட்டத்தை மத்திய அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்தார். 
ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்: நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு


ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்பு சட்டத்தை மத்திய அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்தார். 

இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசியதாவது,  

"மிக முக்கியமானப் பிரச்னையை அவையின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இது ஒரு தேசிய அவமானம். ஆணவக் கொலை நாடு முழுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் வேதனைப்படக்கூடிய, வெட்கப்படக்கூடிய ஒரு குற்றச் செயல் ஆணவக் கொலை என்பதாகும். அண்மையில் தமிழகத்தில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வர்ஷினி பிரியா என்ற இளம் பெண்ணையும், அவர் திருமனம் செய்து கொண்ட கனகராஜ் என்ற இளைஞரையும் அவரது பெற்றோரும், உடன்பிறந்தவர்களும் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார்கள். 

சாதிக் கௌரவம் என்ற வறட்டு கௌரவத்தின் அடிப்படையில், இந்தக் கொலை நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பலமனேரி என்ற நகரத்தையொட்டி உள்ள கிராமத்தில் கேசவ் மற்றும் ஹேமாவதி என்ற இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இதன் காரணத்தால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, பிறந்த 10 நாள் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிய நேரத்தில், அந்தப் பெண்ணை கடத்திச் சென்று அவருடைய பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் படுகொலை செய்துள்ளனர்.  

இது நாள்தோறும் நாட்டில் நடந்து வருகிற கொடூரமான குற்றச் செயலாகும்"

இதைத்தொடர்ந்து, ஆணவக் கொலை தொடர்பாக உச்சநீதிமன்றம் 2018-இல் ஏற்கெனவே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறிய திருமாவளவன், ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அந்தத் தீர்ப்பை வாசித்துவிட்டு தனது உரையை முடித்துக்கொண்டார். 

ஆணவக் கொலைகளை தடுப்பதற்குச் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சில அறிவுரை வழங்கியது. 

உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு இந்திய சட்ட ஆணையம் சிறப்பு சட்டத்தை சமர்பித்தது. அது மத்திய அரசில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. எனவே, ஆணவக் கொலைகளை தடுப்பதற்காக சட்ட ஆணையம் இயற்றிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார். இந்தக் கோரிக்கையுடன் திருமாவளவன் தனது உரையை நிறைவு செய்தார்.   

அவர் ஏற்கெனவே, ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com