500 ஆண்டுகள் பழைமையான குருத்வாராவில் இந்திய பக்தர்கள் வழிபட பாகிஸ்தான் அனுமதி

பாகிஸ்தானில் உள்ள 500 ஆண்டுகள் பழைமையான சீக்கிய குருத்வாராவில் இந்திய சீக்கிய பக்தர்கள் வழிபடுவதற்கு அந்நாட்டு அரசு முதல் முறையாக
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் அமைந்துள்ள பாபே-தீ-பர் குருத்வாரா.
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் அமைந்துள்ள பாபே-தீ-பர் குருத்வாரா.


பாகிஸ்தானில் உள்ள 500 ஆண்டுகள் பழைமையான சீக்கிய குருத்வாராவில் இந்திய சீக்கிய பக்தர்கள் வழிபடுவதற்கு அந்நாட்டு அரசு முதல் முறையாக அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகையில் வெளியான  செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
லாகூரில் இருந்து 140 கி.மீ. தொலைவில் இருக்கும் சியால்கோட் நகரில் பாபே-தீ-பர் குருத்வாரா அமைந்துள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக், 16-ஆம் நூற்றாண்டில் காஷ்மீரில் இருந்து லாகூருக்கு வந்தபோது, இங்கிருந்த பேரி மரத்தடியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது நினைவாக, அந்த இடத்தில் சர்தார் நாதா சிங் என்பவர், குருத்வாராவைக் கட்டினார்.
பாகிஸ்தானில் ஏராளமான சீக்கிய குருத்வாராக்கள் உள்ளன. இந்த குருத்வாராக்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சீக்கிய யாத்ரீகர்கள் வருகை தருவது வழக்கம்.  ஆனால், சியால்கோட் குருத்வாராவில் பாகிஸ்தான், ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் வழிபடுவதற்கு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சியால்கோட் குருத்வாராவில் வழிபடுவோரின் பட்டியலில் இந்திய சீக்கிய யாத்ரீகர்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு மாகாண மத விவகாரங்கள் துறைக்கு பஞ்சாப் மாகாண ஆளுநர் முகமது சர்வார் உத்தரவிட்டுள்ளார். இனி, பாகிஸ்தான் வரும் சீக்கிய யாத்ரீகர்கள், சியால்கோட் குருத்வாராவையும் வழிபடலாம் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநானக் நினைவிடம் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூரில் இருந்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூருக்கு வழித்தடம் அமைப்பதற்கான பணிகளை இரு நாட்டு அரசுகளும் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com