நிலக்கரிச் சுரங்க முறைகேடு: நவீன் ஜிண்டாலுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில், தொழிலதிபரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான நவீன் ஜிண்டால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு தில்லி சிபிஐ சிறப்பு


நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில், தொழிலதிபரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான நவீன் ஜிண்டால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மத்தியப் பிரதேசத்தில் நவீன் ஜிண்டாலுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டில் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைப் பெறுவதற்காண விண்ணப்பங்களில்,  உண்மைக்கு மாறான தகவல்களைக் குறிப்பிட்டு, மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தை அவர்  ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, விசாரணை நடத்திய சிபிஐ, ஜிண்டாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், நவீன் ஜிண்டால், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சுஷீல் மாரோ, முன்னாள் துணை இயக்குநர் ஆனந்த் கோயல், தலைமைச் செயல் அதிகாரி விக்ராந்த் குஜ்ரால், நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி டி.என்.அப்ரால் ஆகிய 5 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
ஜிண்டால் உள்ளிட்டோருக்கு எதிராக ஏமாற்றுதல், குற்றச் சதி ஆகிய இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை, ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இருந்து ஜிண்டால் உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மற்றொரு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்றதில் முறைகேடு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், நவீன் ஜிண்டால், அப்போதைய நிலக்கரித் துறை இணையமைச்சர் தாசரி நாராயண ராவ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com