மேகாலயத்தில் பலத்த மழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேகாலய மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.


மேகாலய மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கிர்மன் சைலா வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
மேகாலயத்தில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. 
தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்ததையடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீர் நிலைகளில் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக, ஷில்லாங் நகரத்துடனான மற்ற மாவட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்துள்ளதையடுத்து பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றி போக்குவரத்து சகஜ  நிலைக்குத் திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில்  மாணவர் வரத்து மிகவும் குறைந்தே காணப்பட்டது என்றார் அவர்.  
இந்த நிலையில், அடுத்த இரண்டு-மூன்று நாள்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் சுமார் 1,000 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளதாக அந்த மையம் மேலும் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com