எந்த மொழியையும் கட்டாயமாக திணிக்கக் கூடாது: வெங்கய்ய நாயுடு 

"எந்த மொழியையும் கட்டாயமாக திணிக்க கூடாது; மொழியானது மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் காரணியாக இருக்க வேண்டுமே தவிர, பிரிவினையை ஏற்படுத்தும் சக்தியாக இருத்தல் கூடாது''
எந்த மொழியையும் கட்டாயமாக திணிக்கக் கூடாது: வெங்கய்ய நாயுடு 

"எந்த மொழியையும் கட்டாயமாக திணிக்க கூடாது; மொழியானது மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் காரணியாக இருக்க வேண்டுமே தவிர, பிரிவினையை ஏற்படுத்தும் சக்தியாக இருத்தல் கூடாது'' என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
 கர்நாடக மாநிலம், மைசூருவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய மொழிகளுக்கான மத்திய கல்வி நிறுவனத்தின் பொன் விழாவில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவர் பேசியதாவது:
 பள்ளிகளில் தாய் மொழியில் பாடம் கற்றுத்தரப்பட வேண்டும். குறிப்பாக, தொடக்கப்பள்ளி நிலையிலாவது தாய்மொழியில் பாடம் போதிக்கப்பட வேண்டும்.
 நிபுணர்கள் குழுக்கள் நடத்திய பல்வேறு ஆய்வுகளும், ஆரம்பநிலை படிப்பின்போது தாய் மொழிகளில் கல்வித் கற்றுத் தரப்பட்டால், குழந்தைகளின் மனம் மற்றும் சிந்தனை மிகப்பெரிய வளர்ச்சியடையும் என்றும், புதிய சிந்தனைகள் அதிகம் கொண்டவர்களாக குழந்தைகளை உருவாக்க உதவும் என்றும் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் சிந்தனைகள் பரந்து விரிவதற்கு அவர்களுக்கு பல்வேறு மொழிகளும் கட்டாயம் கற்றுத்தரப்பட வேண்டும்.
 புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய அரசின் வரைவு அறிக்கை வரவேற்ககூடியதாகும். தாய்மொழி, உள்ளூர் மொழி, பழங்குடியினர் மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான கல்வியை ஊக்குவிப்பதற்கு பல்வேறு ஆலோசனைகள், அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த வரைவு அறிக்கையில், குழந்தைகள் பன்முக திறமைகளை ஏற்கும் திறன் கொண்டோராக இருத்தல் வேண்டும், ஆரம்ப காலத்தில் இருந்தே இது ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 வீடு, சமூகம், கூட்டம், நிர்வாக ஆலோசனை ஆகியவற்றில் சொந்த மொழிகளில் இனி அதிகம்பேர் பேச ஆரம்பிப்பார்கள் என்றும், அத்தகைய மொழிகளை பேச, எழுத, தகவல் தொடர்புக்கும் பயன்படுத்துவோருக்கு மதிப்பு மற்றும் மரியாதை கொடுக்கப்படும் என்றும் நம்புகிறேன். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, மொழி ஒரு ஊக்க சக்தியாக திகழ வேண்டும். நல்ல நிர்வாகத்தின் பகுதியாக, மொழியை ஊக்குவிக்கும் நடவடிக்கை இருத்தல் வேண்டும். மொழிகளை பாதுகாக்கவும், அதை மேம்படுத்தவும் பல்வேறு கடுமையான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியது அவசியமாகும்.
 வளர்ச்சி மற்றும் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி ஆகியவற்றில் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் காரணியாக மொழி திகழ வேண்டுமே தவிர, பிரிவினையை ஏற்படுத்தும் சக்தியாக மொழி இருத்தல் கூடாது. ஒவ்வொரு மொழியும் மிகவும் முக்கியமானவை ஆகும். அதை பாதுகாக்கவும், வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 இந்தியாவில் 19,500க்கும் கூடுதலான மொழிகள், தாய்மொழியாக பேசப்படுவதாக மொழி குறித்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதில் 121 மொழிகள், 10,000 பேர் அல்லது அதற்கு கூடுதலான மக்களால் பேசப்படுகின்றன.
 அத்துடன், நமது நாட்டில் பேசப்படும் 196 மொழிகள் அழியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுவது வேதனையை தருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். மொழியை பாதுகாக்கவும், வளர்க்கவும் அந்த மொழியை தொடர்ந்து பயன்படுத்துவதுதான் நம்மிடம் இருக்கும் ஒரே உபாயமாகும் என்றார் வெங்கய்ய நாயுடு.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com