தலாய்லாமா தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிட்டால் இருதரப்பு உறவு பாதிக்கப்படும்: சீனா எச்சரிக்கை

"தலாய்லாமா தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையீடு கூடாது; ஒருவேளை இந்தியா தலையிட்டால், அது இருதரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்'' என்று சீனா எச்சரித்துள்ளது.

"தலாய்லாமா தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையீடு கூடாது; ஒருவேளை இந்தியா தலையிட்டால், அது இருதரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்'' என்று சீனா எச்சரித்துள்ளது.
 இதுகுறித்து திபெத்தின் லாசா நகரில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சீன அமைச்சர் நிலையிலான அதிகாரி வாங் நெங் செங் கூறியதாவது:
 அடுத்த தலாய்லாமா தேர்வு என்பது வரலாற்று ரீதியில் முக்கியமான விவகாரமாகும். மேலும் இந்த விவகாரத்துடன் மதம், அரசியல் ஆகியவையும் சம்பந்தப்பட்டுள்ளது. அடுத்த தலாய்லாமாவை தேர்வு செய்வதற்கு என்று தனியாக அமைப்புகளும், அதற்கென பிரத்யேக நடைமுறைகளும் உள்ளன.
 பிற நாடுகளில் வசிக்கும் ஏதேனும் தனிநபர் அல்லது குழுக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்பட கூடாது.
 தற்போது தலாய்லாமாவாக இருப்பவரை சீனா அங்கீகரித்துள்ளது. இல்லையெனில் அந்தப் பதவியில் அவரால் நீடிக்க முடியாது. அதேபோல் அடுத்த தலாய்லாமாவும் சீனாவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, தற்போதைய தலாய்லாமா ஏதேனும் வழியை கையாண்டால், அதை சீன அரசு அங்கீகரிக்காது. அதேபோல் திபெத்தில் உள்ள பௌத்த மதத்தினரும் அதை ஏற்க மாட்டார்கள்.
 தற்போது தலாய்லாமாவாக இருப்பவர், தனது அரசியல் நோக்கங்களுக்காக திபெத்தைச் சேர்ந்த இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார். அவர்களை தூண்டி விட்டு வருகிறார். திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்கத் தயாரென தலாய்லாமா கூறியிருப்பது வெறும் அரசியல் ஜாலமாகும். திபெத்தை தனிநாடாகத்தான் தற்போதும் அவர் கருதுகிறார். தலாய்லாமா தரப்பில் சீனாவின் ஒரு பகுதியாக திபெத்தை ஏற்பது தொடர்பாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரையில், அவரது வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லை.
 அடுத்த தலாய்லாமாவை தேர்வு செய்வது தொடர்பாக தலாய்லாமா பிரதிநிதிகள், சீன அரசு பிரதிநிதிகள் இடையே ஏற்கெனவே 10 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன என்றார்.
 பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் திபெத் விவகாரத்துக்கான சீனா ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜுவோ லுவோ கூறுகையில், "அடுத்த தலாய்லாமா சீனாவுக்குள்தான் தேர்வு செய்யப்பட வேண்டும். இதை இந்தியாவும் அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறு இந்தியா அங்கீகரிக்கவில்லையெனில், அது இருநாடுகள் இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்' என்றார்.
 திபெத் விவகாரத்தில் சீன அரசுக்கு ஆலோசனை அளிக்கும் குழு உறுப்பினரான ஜா கூறுகையில், "அடுத்த தலாய்லாமா தேர்வு என்பது சீனாவுக்கு மிகவும் முக்கிய விவகாரமாகும். ஆதலால் சீனாவின் நட்பு நாடு அல்லது நண்பர்கள் இந்த விவகாரத்தில் தலையிடவோ அல்லது குறுக்கிடவோ கூடாது. சீனாவில் தேர்வு செய்யப்பட்ட தலாய்லாமாவை இந்தியா அங்கீகரிக்காத பட்சத்தில் என்ன நடக்கும் என்ற கேள்வி தேவையில்லாத ஒன்றாகும். அனுமானத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விக்கு அதே ரீதியில் பதிலளிக்க முடியாது' என்றார்.
 திபெத்தில் கடந்த 1959ஆம் ஆண்டு சீனா அடக்குமுறையை ஏவிவிட்டபோது, அங்கிருந்த 14ஆவது தலாய்லாமா இந்தியாவுக்கு தப்பியோடி வந்தார். அவருக்கு இந்தியாவும் அடைக்கலம் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, ஹிமாசலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவை தலைமையிடமாகக் கொண்டு, நாடு கடந்த திபெத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. தற்போது தலாய்லாமாவாக இருப்பவருக்கு 84 வயதாகிறது. இதனால் அவருக்குப் பிறகு அடுத்த தலாய்லாமாவை தேர்வு செய்வது குறித்த விவாதம் தற்போதே தொடங்கி விட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com