மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகம்

மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகம்


மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைபவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் விபத்து ஏற்படுத்தியவர்கள் இழப்பீடு வழங்கும் வகையில், மத்திய அரசு  திருத்தம் மேற்கொண்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, முந்தைய மக்களவையின் காலம் கடந்த மே மாதம் நிறைவடைந்ததையடுத்து, இந்த மசோதா காலாவதியானது. இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், மசோதாவை மக்களவையில் திங்கள்கிழமை மீண்டும் அறிமுகம் செய்தார். 
இந்த மசோதாவில், சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை அதிகரிப்பது, பழகுநர் உரிமத்தை இணையவழியில் பெறுவது, விபத்தில் சிக்கியோர் எளிய முறையில் காப்பீடு பெறுவது, விபத்தில் காயமடைந்தோரைக் காப்பவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு அளிப்பது, ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஒரு மாதத்திலிருந்து ஓராண்டாக அதிகரிப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைபவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் அந்த விபத்தை ஏற்படுத்தியவர்கள் இழப்பீடு வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இந்த மசோதாவிலுள்ள சில அம்சங்கள் மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. செளகதா ராய் தெரிவித்தார். அக்கட்சியின் மற்றொரு எம்.பி. மகுவா மோய்த்ராவும் சில திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளதரி, மசோதா முழுவதுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், சில திருத்தங்களை மட்டும் எதிர்ப்பதாகவும் கூறினார்.
சாலை விபத்துகள் குறைவு: இதையடுத்து, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:
நாட்டில் 30 சதவீத ஓட்டுநர் உரிமங்கள் போலியாகப் பெறப்பட்டுள்ளன. சாலை விபத்துகளால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்; 5 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர்.
சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளைக் கடுமையாக்கும் முயற்சியைக் கடந்த 5 ஆண்டுகளாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதில் வெற்றி பெற முடியவில்லை. சட்டத்தில் கடுமையான விதிகளைச் சேர்க்க முடியாதபோதும், நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 3 முதல் 4 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. முக்கியமாக, தமிழ்நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது.
மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு முயற்சி செய்யவில்லை. சாலையில் பயணம் செய்வோருக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கும் வகையிலான இந்த மசோதாவுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com