ஆர்பிஐ உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்கலாம்: பிமல் ஜலான் குழு பரிந்துரை

மத்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) உபரி நிதியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று ஆர்பிஐ முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.
ஆர்பிஐ உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்கலாம்: பிமல் ஜலான் குழு பரிந்துரை


மத்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) உபரி நிதியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று ஆர்பிஐ முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் ரிசர்வ் வங்கிகளிடம் இருக்கும் உபரி நிதி, அரசிடம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள ரிசர்வ் வங்கிகள் அதிகபட்சமாக 14 சதவீத உபரி நிதியை தங்கள் வசம் வைத்துள்ளன. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி 28 சதவீத உபரி நிதியை வைத்துள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி, உபரி நிதியை வழங்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய நிதியமைச்சகம் கோரியது. ஆனால், அந்த நிதியைத் தர ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. 

இதனால், ரிசர்வ் வங்கியின் அப்போதைய ஆளுநரான உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. 

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைப்பதற்கு கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் வாரியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின், முதல் கூட்டம் நடைபெறும் நாளில் இருந்து 90 நாள்களில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

ஆனால், குறித்த காலத்துக்குள் அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யாததால் 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்தக் குழு தனது 
இறுதி அறிக்கையை தயாரித்துள்ளது.

அதில், 3 முதல் 5 ஆண்டு இடைவெளியில் ஆர்பிஐ தனது உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்கலாம். இதன் மூலம் அரசு தனது நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்பிஐ-யிடம் இருந்து உபரித் தொகையை மட்டும் கோராமல், ஈவுத் தொகையாக ரூ.90,000 கோடி வரை நடப்பு நிதியாண்டில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. கடந்த நிதியாண்டில் ரூ.68,000 கோடியை ஆர்பிஐ-யிடம் இருந்து ஈவுத் தொகையாக மத்திய அரசு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com