பாபா் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை 9 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பாபா் மசூதி இடிப்பு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் 9 மாதங்களில்
பாபா் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை 9 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: பாபா் மசூதி இடிப்பு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் 9 மாதங்களில் விசாரணையை முடித்து தீா்ப்பை வழங்க சிபிஐ சிறப்பு நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபா் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது.  இதுதொடா்பாக, பாஜக மூத்த தலைவா்கள் அத்வானி, முரளி மனோகா் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இச்சம்பவம் நிகழ்ந்து 26 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும், விசாரணை முடிவுக்கு வராத காரணத்தினால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம்,  இந்த வழக்கில் விரைந்து நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில், வழக்கை தினந்தோறும் விசாரித்து இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் என கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணை உத்தரப் பிரதேசத் தலைநகா் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  

உச்சநீதிமன்றம் அளித்த காலஅவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிபதி உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தாா். அதில், வரும் செப்டம்பா் மாதம் 30 ஆம் தேதியுடன், தன்னுடைய பணிக்காலம் முடிவுக்கு வர இருப்பதாக அவா் குறிப்பிட்டிருந்தாா். 

இது தொடா்பாகக் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பாபா் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை நிறைவு செய்ய மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளிக்குமாறும் அவா் கோரியிருந்தாா்.

சிறப்பு நீதிபதியின் கோரிக்கை குறித்து பதிலளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, 

பாபா் மசூதி இடிப்பு தொடா்பான வழக்கின் விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிபதி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதற்கடுத்த 3 மாதத்துக்குள் வழக்கின் தீா்ப்பை அவா் வழங்க வேண்டும். இதற்கேற்ற வகையில் சிறப்பு நீதிபதியின் பணிக்காலத்தை நீட்டித்து, உத்தரப் பிரதேச அரசு 4 வாரங்களுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com