சோன்பத்ராவுக்கு செல்ல விடாமல் பிரியங்காவை தடுத்து நிறுத்திய போலீஸார்

உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் நிலத்தகராறு ஏற்பட்ட கிராமத்துக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா.
மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா.

உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் நிலத்தகராறு ஏற்பட்ட கிராமத்துக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

கிராம மக்கள் மீது அந்த கிராமத்தின் தலைவரும், அவரது அடியாள்களும் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து கிராமத் தலைவர் யக்யா தத் உள்பட 29 பேரை கைது செய்துள்ளனர்.

பிரியங்கா, வாராணசியில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து சோன்பத்ரா வந்துகொண்டிருந்தபோது அவரை நாராயண்பூரில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அத்துடன், அவரையும், உடன் இருந்த ஆதரவாளர்களையும் அங்கிருந்து பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.

இதையடுத்து, அந்தப் பண்ணை இல்லத்துக்கு அருகே ஆதரவாளர்களுடன் அமர்ந்து பிரியங்கா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பிரியங்கா கூறுகையில், "பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவே விரும்பினேன். என்னுடைய மகன் வயதில் உள்ள சிறுவன் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன காரணத்துக்காக நான் தடுத்து நிறுத்தப்பட்டேன்.

4 பேருடன்தான் அந்தக் கிராமத்துக்குச் செல்ல முயன்றேன்' என்றார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "பிரியங்காவை கைது செய்ததன் மூலம் 10 பேர் கொலை செய்யப்பட்டதை உத்தரப் பிரதேச அரசு மூடி மறைக்க பார்க்கின்றதா?' என்று கேள்வி எழுப்பினார்.

ராகுல் கண்டனம்: நிலத்தகராறில் காயமடைந்தவர்களை சந்திக்க விடாமல் பிரியங்காவை தடுத்ததன் மூலம் பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பின்மை அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், "சோன்பத்ராவில் பிரியங்கா சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளை காண அனுமதிக்காதது, மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பின்மையை  வெளிப்படுத்துகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவும் பிரியங்காவை தடுத்து நிறுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சோன்பத்ரா மாவட்டத்தில் நிலத்தகராறு நடந்த கிராமத்துக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (என்சிஎஸ்டி) திங்கள்கிழமை வரவுள்ளது.
அந்த ஆணையத்தின் தலைவர் நந்த குமார் சாய் தலைமையிலான குழு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கவுள்ளது.

காவல் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோரிடமும் அந்தக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com