கர்நாடகம்: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, அந்த மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.  
கர்நாடகம்: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு


கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, அந்த மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.  
காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜிநாமா செய்துவிட்டு மும்பையில் தங்கியுள்ளனர். இதனால் கர்நாடகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்து 14 மாதங்களே ஆன நிலையில், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியது. 
இதைத் தொடர்ந்து, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி ஜூலை 18-ஆம் தேதி தாக்கல் செய்தார். இதன் மீது கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விவாதம், 3-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.  
காங்கிரஸ், மஜத-பாஜக வாக்குவாதம்: இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்குமாறு காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். 
இதுதொடர்பாக இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.  காங்கிரஸ்-மஜதவின் கோரிக்கையை ஏற்க மறுத்த பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். 
 இதன்பிறகு, முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பை செவ்வாய்க்கிழமை நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். 
உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக...: சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆர்.சங்கர், எச்.நாகேஷ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. 
மேலும், முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரின் மனுக்களும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது. எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்ப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பை செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு வசதியாக பேரவையை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தினர். 
இதை ஏற்றுகொள்ள மறுத்த பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், நெருக்கடி கொடுத்தால் பதவியை ராஜிநாமா செய்வேன் என்றும் தெரிவித்தார். மீண்டும் அவை கூடி, இரவு 11.40 மணி வரை  விவாதம் நடைபெற்றது. 
இன்று விவாதமும், வாக்கெடுப்பும்...: இறுதியாக செவ்வாய்க்கிழமையும் விவாதம் நடத்தி, இரவு வாக்கெடுப்பு நடத்தலாம் என்று காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் தெரிவித்தனர். 
காங்கிரஸ் குழுத் தலைவர் சித்தராமையா, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் வாக்கெடுப்பை நடத்திவிடலாம் என்றார். அதை ஏற்க மறுத்த பேரவைத் தலைவர், மாலை 4 மணி வரை அவகாசம் அளித்தார்.  எனினும், மாலை 6 மணி வரை அவகாசம் அளிக்குமாறு சித்தராமையா கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கூடும் என்று தெரிவித்தார்.
அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 12 பேர், ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com