கர்நாடகம், சோன்பத்ரா விவகாரங்கள்: எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைப்பு

கர்நாடக அரசியல் குழப்பம்,  சோன்பத்ரா வன்முறை, கும்பல் கொலை  உள்ளிட்ட  விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ்,
மாநிலங்களவையின் மையப் பகுதியில் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.
மாநிலங்களவையின் மையப் பகுதியில் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.


கர்நாடக அரசியல் குழப்பம்,  சோன்பத்ரா வன்முறை, கும்பல் கொலை  உள்ளிட்ட  விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ்,  சமாஜவாதி ஆகிய எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவை நடவடிக்கைகள் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
மாநிலங்களவை அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் காலை 11 மணிக்கு கூடியது.   தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதும் கர்நாடக அரசியல் நெருக்கடி,  கும்பல் கொலை,  சோன்பத்ரா வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ்  உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் அளித்திருந்த நோட்டீஸ்கள் ஏற்கப்படவில்லை.
 இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,  கர்நாடக அரசியல் நெருக்கடி,  சோன்பத்ரா வன்முறை,  பிகாரில் கும்பலை கொலை, தலித் விவகாரங்களை எழுப்பி அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர்,  துணைத் தலைவர் ஹரிவன்ஸ் தலைமையில் மீண்டும் அவை கூடிய போது, காங்கிரஸ்,  சமாஜவாதி, பகுஜன் சமாஜ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சிபிஐ, மார்க்சிஸ்ட், ஆர்ஜேடி, ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதே விவகாரங்களை எழுப்பி கோஷமிட்டனர். அமளிக்கு இடையே, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அமளி தொடர்ந்ததால் அவை கூடிய 10 நிமிடங்களிலேயே பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 
அவை மீண்டும் கூடியதும்,  மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராயை மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவை அவையில் தாக்கல்  செய்யுமாறு  துணைத் தலைவர் ஹரிவன்ஸ் கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர்.
  ஆனால், துணைத் தலைவர் ஹரிவன்ஸ், கர்நாடக அரசியல் நெருக்கடி விவகாரம் குறித்து அவைத் தலைவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அதை விவாதிக்க முடியாது என்றார்.  
அப்போது, விதி எண் 95-ஐ குறிப்பிட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் பேசுகையில், கடந்த வாரம் மக்களவையில் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு வெள்ளிக்கிழமை மாலையில் அனுப்பப்பட்டுள்ளதால்,  மசோதாவுக்கான சட்டத்திருத்தங்களை சமர்ப்பிக்க போதிய நேரம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை என்றார். அதற்கு துணைத் தலைவர்,  உறுப்பினர்கள் மசோதாவுக்கான சட்டத் திருத்தங்களை அளிக்க நண்பகல் வரை நேரம் இருந்தது என்றார். 
காங்கிரஸ் குழு துணைத் தலைவர் ஆனந்த் சர்மா பேசுகையில், ஒரு மசோதா மீதான தங்களது திருத்தங்களை உறுப்பினர்கள் அளிக்க குறைந்தபட்சம் இரு தினங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.  ஆனால்,  மசோதாவை நிறைவேற்ற அரசு மிகுந்த அவசரம் காட்டுகிறது. 
உறுப்பினர்களுக்கான உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன என்றார்.   பின்னர், சட்டத் திருத்தங்களை சமர்ப்பிக்குமாறு இரு உறுப்பினர்களின் பெயர்களைக் கூறி துணைத் தலைவர் அழைத்தார். ஆனால், அவர்கள் அளிக்காததால் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை என துணைத் தலைவர் தெரிவித்தார்.
அப்போது, திமுக உறுப்பினர் திருச்சி சிவா அவை விதிமீறல் குறித்துப் பேசுகையில், அவையில் திருத்தங்களைத் தாக்கல் செய்ய விரும்பிய உறுப்பினர்கள், அவை முறையாக இருக்குமாறு செய்யக்  கோரினர். ஆனால்,  அவர்கள் திருத்தங்களைத் தாக்கல் செய்யவில்லை என நீங்கள் ஊகித்துள்ளீர்கள். எனவே, அவையை முறையாகக் கொண்டு வந்த பிறகு திருத்தங்களை உறுப்பினர்கள் அளிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து நிலவிய அமளி காரணமாக,  அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை நடைபெற்றது.
முன்னதாக, மக்களவையிலும் ராம்சந்திர பாஸ்வான், ஷீலா தீட்சித் ஆகியோர் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
இதையடுத்து, அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவையை நாள் முழுவதும் ஒத்திவைக்காததற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்துக்கு திங்கள்கிழமை பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மனித உரிமை ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகவே ஆணையத்தின் பிரதிநிதிகளின் வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையத்தின் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கு குழு உள்ளதால், பிரதிநிதிகள் நியமனத்தில் அச்சப்படத் தேவையில்லை என்றார். பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com