நிறைவேறியது ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா

தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
நிறைவேறியது ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா


தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. முன்னதாக, இந்த மசோதாவை  நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் கிடைத்தன. இதனால், தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வியடைந்தது.
இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இந்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதனால், அவையை 4 முறை ஒத்திவைக்க நேரிட்டது. முன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா மக்களவையில் கடந்த திங்கள்கிழமை நிறைவேறியது குறிப்பிட்டத்தக்கது.
அரசு மீதான குற்றச்சாட்டுகள்: தகவல் அறியும் உரிமைச் சட்ட (திருத்த) மசோதா 2019, தகவல் ஆணையர்களின் நியமனம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள், அவர்களின் பதவிக்காலம், அவர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயிப்பதற்கு அதிகாரமளிக்க வகை செய்கிறது. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும், தகவல் ஆணையங்களின் அதிகாரத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
மசோதா அறிமுகம்: இந்நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை விவாதத்துக்கு வந்தது. மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்  மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். முன்னதாக, இந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென்றும், நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 5 பேர் நோட்டீஸ் அளித்தனர்.
4 முறை ஒத்திவைப்பு: ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதற்கு நடுவே காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷை பேசுமாறு அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அழைத்தார். ஆனால், கூச்சல், குழப்பத்துக்கு நடுவே அவரால் பேச முடியவில்லை. மேலும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள்அவையின் மையப் பகுதியில் குவிந்து கோஷமிட்டனர். இதனால், அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக ஹரிவன்ஷ்  அறிவித்தார். அவை மீண்டும் கூடியபோது இதே பிரச்னை நீடித்தது. இதனால் மீண்டும் அவையை ஒத்திவைக்க நேரிட்டது. ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா பிரச்னையால் மாநிலங்களவை 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவளித்த பிஜேடி, டிஆர்எஸ்:  தங்கள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு பிஜு ஜனதா தளம் (பிஜேடி), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்தன. இக்கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம் பெறவில்லை. எனினும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கோரிக்கையை ஏற்று இக்கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியானது. முன்னதாக, டிஆர்எஸ் கட்சி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆர்டிஐ சட்டம், பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனை கோரப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர், ஆர்டிஐ சட்டம் மூலமாக தகவல்களைப் பெற்றுள்ளனர். 
அரசின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத்தன்மை இருப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்தது. இச்சட்டத்தின் மூலம் நமது நாட்டின் ஜனநாயகத் தன்மை மேலும் வலுவானது. இப்போது கொண்டுவரப்படும் சட்டத் திருத்தமானது, தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையிலிருந்து வியாழக்கிழமை வெளிநடப்பு செய்த 
குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள்.


எதிர்க்கட்சிகளின் திருத்தம் தோல்வி
ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து, அதனை முதலில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இது ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆதரவாக 75 வாக்குகளும், எதிர்ப்பாக 117 வாக்குகளும் கிடைத்தன. இதனால், தீர்மானம் தோல்வியடைந்தது. முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த சி.எம். ரமேஷ், மற்ற எம்.பி.க்கள் கையெழுத்திட்ட வாக்குச் சீட்டுகளை சேகரித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, அவரை இருக்கைக்கு திரும்புமாறு அவையை நடத்தி வந்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வலியுறுத்தினார்.
மோடியின் பழிவாங்கும் நடவடிக்கை: காங்கிரஸ்
மசோதா குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், ஆர்டிஐ சட்டம் தன்னை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிய காரணத்தால் பழிவாங்கும் நடவடிக்கையாக அச்சட்டத்தை ஒன்றுமில்லாமல் போக பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஏனெனில், பிரதமரின் கல்வித் தகுதி குறித்து ஆர்டிஐ மூலம்தான் கேள்வி எழுப்பப்பட்டது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் வங்கிகளுக்குத் திரும்பிய பணம், கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப் பணம் தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியதால், மத்திய அரசின் தோல்வி வெளிப்பட்டது. அடுத்ததாக 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டதாக பிரதமர் கூறிய தகவல் பொய் என்பது ஆர்டிஐ மூலம்தான் மக்களுக்குத் தெரியவந்தது. இப்படி பிரதமரின் பல ஏமாற்று வேலைகளை ஆர்டிஐ அம்பலப்படுத்தியது. இதன் காரணமாகவே ஆர்டிஐ சட்டத்தை ஒழித்துவிட பிரதமர் முடிவெடுத்தார். இது அவரது பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com