நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: நவீன் ஜிண்டாலுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில், தொழிலதிபரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான நவீன் ஜிண்டால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை குற்றச்சாட்டுகளைப்


நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில், தொழிலதிபரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான நவீன் ஜிண்டால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
இந்த வழக்கில், நவீன் ஜிண்டால், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சுஷீல் மாரோ, நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஆனந்த் கோயல், தலைமைச் செயல் அதிகாரி விக்ராந்த் குஜ்ரால், நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி டி.என்.அப்ரால் ஆகிய 5 பேருக்கு எதிராக, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார். 
நவீன் ஜிண்டால் உள்ளிட்டோருக்கு எதிராக ஏமாற்றுதல், குற்றச் சதி ஆகிய இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள வடக்கு உர்தான் நிலக்கரிச் சுரங்கம், நவீன் ஜிண்டாலுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு கடந்த 2009-ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, கடந்த 2007-ஆம் ஆண்டு அவர் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பங்களில், உண்மைக்கு மாறான தகவல்களைக் குறிப்பிட்டு, நிறுவனங்களைத் தேர்வு செய்யும் குழுவையும், மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தை அவர் ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, விசாரணை நடத்திய சிபிஐ, ஜிண்டாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கை கடந்த ஜூலை 1-ஆம் தேதி விசாரித்த நீதிபதி பரத் பராசர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு உத்தரவிட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மற்றொரு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்றதில் முறைகேடு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், நவீன் ஜிண்டால், அப்போதைய நிலக்கரித் துறை இணையமைச்சர் தாசரி நாராயண ராவ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com