பாஜக பெண் எம்.பி. குறித்த ஆஸம் கான் கருத்தால் சர்ச்சை

பாஜக பெண் எம்.பி. ரமா தேவி குறித்து சமாஜவாதி கட்சி எம்.பி. முகம்மது ஆஸம் கான் தெரிவித்த கருத்தால் மக்களவையில் சர்ச்சை ஏற்பட்டது.
பாஜக பெண் எம்.பி. குறித்த ஆஸம் கான் கருத்தால் சர்ச்சை


பாஜக பெண் எம்.பி. ரமா தேவி குறித்து சமாஜவாதி கட்சி எம்.பி. முகம்மது ஆஸம் கான் தெரிவித்த கருத்தால் மக்களவையில் சர்ச்சை ஏற்பட்டது.
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றபோது, அவை அலுவல்களை பாஜக பெண் எம்.பி. ரமா தேவி தலைமை வகித்து நடத்தினார். இந்த விவாதத்தில் கலந்து கொண்டு ஆஸம் கான் எம்.பி. பேசினார். அப்போது அவரிடம், பிற இடங்களைப் பார்த்து பேசாமல், அவைத் தலைவரை பார்த்து பேசும்படி ரமாதேவி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஆஸம் கான் சில ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆஸம் கானின் கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்கும்படி ரமாதேவி உத்தரவிட்டார். அப்போது ரமா தேவி, ஆஸம் கானின் இளைய சகோதரி போன்றவர் தாம் என்றார்.
முன்னதாக, ஆஸம் கானின் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை கேட்டு அதிர்ச்சியடைந்த மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் அவரை மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்த வேண்டும் என்றனர். இதைத் தொடர்ந்து ஆஸம் கான் பேசுகையில் ரமா தேவி எனது அன்புக்குரிய சகோதரி போன்றவர்; அவரை நான் அவமதிக்கவில்லை என்றார்.
சமாஜவாதி தலைவரும், எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ், ஆஸம் கானுக்கு ஆதரவு தெரிவித்து பேச முயற்சித்தார். அப்போது அவை அலுவலை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமை வகித்து நடத்தத் தொடங்கினார். அகிலேஷ் பேசுகையில், அவைத் தலைவர் பதவிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜக எம்.பி.க்களின் செயல்பாடுகளை அகிலேஷ் விமர்சித்தார். இதனால், அகிலேஷை மன்னிப்பு கேட்கும்படி ஓம் பிர்லா வலியுறுத்தினார்.
ஆஸம் கான் குறுக்கிட்டு, நீண்டகாலமாக அரசியலில் உள்ளேன். மக்கள் மன்றத்தில் பேசத் தகுதியில்லாத வார்த்தைகளில் பேசியிருந்தால், பதவியை உடனடியாக ராஜிநாமா செய்யத் தயாராக உள்ளேன் என்றார்.
அப்போது தமக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்து, அவையிலிருந்து பகுஜன் சமாஜ் உறுப்பினர் டேனிஷ் அலி வெளிநடப்பு செய்தார். தாம் அவமதிப்பு செய்யப்பட்டு விட்டதால், அவையில் பேச முடியாது எனத் தெரிவித்து ஆஸம் கானும் வெளிநடப்பு செய்தார். அவர்களைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ், சமாஜவாதி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி, முத்தலாக் மசோதா மீதான விவாதம் நடைபெறுகையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளியேறுவது நல்லதல்ல என்றார்.
தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்: இதனிடையே, பாஜக எம்.பி. ரமா தேவி குறித்த ஆஸம் கானின் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா கூறுகையில், எம்.பி. பதவியிலிருந்து ஆஸம் கானை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றார். தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ஆஸம் கானை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com