சித்தார்த்தா கடத்தப்பட்டிருக்கலாம்: டி.கே.சிவகுமார் சந்தேகம்

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சித்தார்த்தா கடத்தப்பட்டிருக்கலாம்: டி.கே.சிவகுமார் சந்தேகம்

பிரபலமான கஃபே காஃபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா, கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மூத்த மருமகன் ஆவார். மேலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய காஃபி எஸ்டேட் வைத்திருப்பவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பெங்களூருவில் இருந்து 375 கி.மீ. தொலைவில் மங்களூருவில் நேத்ராவதி நதியின் அருகே சென்றவுடன் காரை நிறுத்துமாறு கூறிவிட்டு நடந்து சென்றவர் ஒருமணிநேரமாகியும் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த சித்தார்த்தாவின் கார் ஓட்டுநர் உடனடியாக குடும்பத்தினர் மற்றும் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து சித்தார்த்தாவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தேவே கௌடா, குமாரசாமி, காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட கர்நாடக அரசியல் தலைவர்கள் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் கூறியதாவது,

சித்தார்த்தா மாயமான விவகாரத்தை என்னால் நம்ப முடியவில்லை, இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த்தாவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு இந்த நிலை ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். 

சித்தார்த்தா நம்நாட்டின் சொத்து. அவர் மாயமானாரா அல்லது யாராவது கடத்தியுள்ளார்களா என்பது தெரியவில்லை என்றார்.

முன்னதாக, கஃபே காஃபி டே ஊழியர்களுக்கும், நிர்வாக இயக்குநர்களுக்கும் அதன் நிறுவனர் சித்தார்த்தா, ஜூலை 27-ஆம் தேதி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், யாரையும் ஏமாற்ற வேண்டும் அல்லது தவறாக வழிநடத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அனைத்து தவறுகளும் என்னுடையது தான். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தொழிலில் ஏற்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி கடன் காரணமாக வி.ஜி.சித்தார்த்தா, தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com