அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை (பிஎம்-கிசான்) விரிவுபடுத்தி அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி வழங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை (பிஎம்-கிசான்) விரிவுபடுத்தி அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி வழங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
 முன்னதாக, சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம், 12. 5 கோடி விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படவிருந்தது.
 இந்நிலையில், மக்களவைத் தேர்தலின்போது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
 அதன்படி, பாஜக மீண்டும் ஆட்சியமைத்ததும் கடந்த 31-ஆம் தேதி நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் 14. 5 கோடி விவசாயிகள் பயன்பெறவுள்ளனர். அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், மாதம் ரூ. 10, 000-க்கும் மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள், கடந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்தியவர்கள், அரசமைப்பு ரீதியான பதவியில் இருக்கும் விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசில் பணியாற்றியவர்கள் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்கள் ஆகியோர் விவசாயிகளாக இருந்தாலும், அவர்கள் இந்த திட்டத்தின் வரம்புக்குள் இல்லை.
 இந்த திட்டத்தின் பயனாளிகள் மற்றும் அவர்களின் நிலம் குறித்த தகவல்களை பிஎம்-கிசான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் மாநில அரசின் வசம் இருக்கும்.
 விதிகளின்படி, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் பட்டியலை தயார் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய விவசாயத் துறை அமைச்சகம் அறிவுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
 கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், இதுவரை 3. 66 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அதில் 3. 03 கோடி பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. 2 கோடி விவசாயிகள் இரு தவணை நிதியுதவியை பெற்றுள்ளனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com