
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்து, தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கர் உலகின் தலைசிறந்த தூதர்களில் ஒருவர் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகளும், வெளியுறவுத் துறை வல்லுநர்களும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதுகுறித்து, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை இணையமைச்சராகப் பொறுப்பு வகித்த நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது:
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்ட தகவலறிந்து மகிழ்ச்சியடைந்தேன். மிகவும் தேர்ச்சி பெற்ற தூதரக அதிகாரியான அவர், உலக விவகாரங்களில் ஆழந்த அனுபவம் பெற்றவர் ஆவார்.
அதன் காரணமாகவே, இந்திய வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்துவதற்கான முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்துவதில் ஜெய்சங்கர் ஆற்றிய பெரும் பங்கு காரணமாக அவர் மீது உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்காவில் மிகுந்த மதிப்பு உள்ளது.
அவர் தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடையும் என்று உறுதியாக நம்பலாம் என்றார் நிஷா தேசாய் பிஸ்வால்.
இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மா கூறுகையில், "உலகின் தலைசிறந்த தூதர்களில் ஜெய்சங்கரும் ஒருவர் ஆவார். மிகவும் கறாராகவும், நேர்மையாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அவருக்கு, உடன்பாடுகளை எட்டுவது எப்படி என்பது மிக நன்றாகவே தெரியும்' என்றார்.
சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்தபோது, மற்ற எந்த தூதராலும் செய்ய முடியாத அளவுக்கு இந்தியா - சீனா இடையிலான பிரச்னைகளை ஜெய்சங்கர் தீர்த்துவைத்ததாக ரிச்சர்ட் வர்மா தெரிவித்தார்.
1977-ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவு பணியை (ஐஎஃப்எஸ்) தொடங்கிய ஜெய்சங்கர், சீனாவுக்கான இந்தியத் தூதராக கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார்.
மேலும், 2013-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், அவர் வெளியுறவுத் துறைச் செயலராக பொறுப்பு வகித்து வந்தார்.