கதுவா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: 7 பேரில் இதுவரை 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் இதுவரை 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கதுவா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: 7 பேரில் இதுவரை 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் இதுவரை 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கதுவா சம்பவத்தின் வழக்கு விசாரணையை ஜம்மு காஷ்மீரிலிருந்து, பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரின் தீர்ப்பும் தனித்தனியாக வாசிக்கப்பட்டு வருகிறது. இதுவரை  கிராம தலைவர் சஞ்சி ராம், அவரது மகன் விஷால், 18 வயதுக்கு உள்பட்டவரான ஆனந்த் தத்தா, காவல்துறை சிறப்பு அதிகாரிகள் தீபக் கஜுரியா, சுரேந்தர் வர்மா உட்பட  6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

இவர்களுக்கான தண்டனை விவரம் விரைவில் வெளியிடப்படும்.

கடந்த ஆண்டு ஜூன் முதல் வாரம் முதலாக இந்த வழக்கு விசாரணை நாள்தோறும் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்று வந்தது. 

கதுவாவில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒருவரை கோயிலில் அடைத்து வைத்து சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றதாகச் செய்திகள் வெளியாகின. 

இதுதொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகளோ, குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதுடன், ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் புகார் எழுந்தது.

நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும், பெரும் கொந்தளிப்பையும் இச்சம்பவம் ஏற்படுத்தியது. அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக காவல் துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா, காவல் துறை சிறப்பு அதிகாரி தீபக் கஜுரியா ஆகியோர் மாநில சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தவிர சிறுவன் ஒருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, உயிரிழந்த சிறுமியின் பெற்றோரின் கோரிக்கைப்படி, காஷ்மீரில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அமர்வு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. அதன்பேரில் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி தேஜ்விந்தர் சிங் அதை விசாரித்து வருகிறார்.

அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், அவரை தொடர்ந்து மயக்கநிலையில் வைத்திருக்க சில மாத்திரைகளை கொடுத்ததாகவும், சாப்பாடு ஏதுமின்றி தொடர்ந்து வெறும் வயிற்றில் மாத்திரை கொடுத்ததால், அச்சிறுமி கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த தகவலாக கருதப்படுகிறது.
 
மேலும், சிறுமி வசித்து வந்த பகுதியில் வாழ்ந்த சிறுபான்மை நாடோடி இனத்தவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவதற்காகவே இந்தச் சம்பவம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தங்களது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக கிராமத் தலைவர் சஞ்சி ராம், அவரது மகன் விஷால், 18 வயதுக்கு உள்பட்டவரான ஆனந்த் தத்தா, காவல்துறை சிறப்பு அதிகாரிகள் தீபக் கஜுரியா, சுரேந்தர் வர்மா உள்ளிட்டோரை குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்திருந்தனர். 

வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழிக்க சஞ்சி ராமிடம் இருந்து ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றதாக காவல்துறை துணை ஆய்வாளர் ஆனந்த், காவலர் திலக் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com