சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட உள்ள சந்திரயான்-2 விண்கலம் ஜூலை மாதம் 15ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் (இஸ்ரோ) தலைவர் கே. சிவன் அறிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட உள்ள சந்திரயான்-2 விண்கலம் ஜூலை மாதம் 15ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் (இஸ்ரோ) தலைவர் கே. சிவன் அறிவித்துள்ளார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ரூ.800 கோடி மதிப்பில் சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தத் திட்டமிட்டு உள்ளது. இதில் நிலவின் தென்துருவமுனையில், தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் முதல் முறையாக ரோவர் வாகனம் ஒன்றும் இணைக்கப்படுகிறது. இந்த சந்திரயான்-2 விண்கலத்தை 2018 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் சந்திரயான்-2 திட்டம் விண்ணில் செலுத்துவது தள்ளிப் போனது.

இறுதியாக 2019ம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவுவது எனத் திட்டமிட்டனர். அதன்படி, ஜூலை 15ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று சிவன் அறிவித்துள்ளார்.

ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவுவதற்குத் தயார் நிலையில் உள்ளது. இதில் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய உள்ள ரோவர் வாகனம் லேண்டர் பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும். ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. விண்ணில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட உடன் ராக்கெட்டிலிருந்து, இந்த அமைப்பு பிரிக்கப்படும். அதன் பிறகு ஆர்பிட்டரின் உதவியுடன், நிலவின் சுற்றுப்பாதைக்கு இந்த அமைப்பு சென்றடையும். திட்டமிட்ட நிலவின் சுற்றுப்பாதைக்கு இந்த அமைப்பு சென்ற உடன், ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரிக்கப்படும். பின்னர் லேண்டரிலிருந்து நிலவின் பரப்பில் ரோவர் வாகனம் இறக்கப்பட்டு, ஆய்வை மேற்கொள்ளும்.

இந்த ரோவர் வாகனம் நிலவின் பரப்பில் செப்டம்பர் 6-ஆம் தேதி தரையிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப்போது ஜூலை 15ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ திட்டவட்டமாக அறிவித்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கி சிறிய வண்டி போன்ற இயந்திரத்தைக் கொண்டு அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும்.

சந்திரயான் -2 விண்கலம் ரூ.603 கோடி செலவிலும், அதனை செலுத்தும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் ரூ.375 கோடி செலவிலும் உருவாக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலத்தை விட, தொழில்நுட்ப அளவில் அதிக வளர்ச்சி பெற்றதாக சந்திரயான் -2 அமைந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com