கதுவா வழக்கில் ஒருவர் விடுவிக்கப்பட்டது வேதனையளிக்கிறது: தலைமை விசாரணை அதிகாரி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில்,
கதுவா வழக்கில் ஒருவர் விடுவிக்கப்பட்டது வேதனையளிக்கிறது: தலைமை விசாரணை அதிகாரி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி சாஞ்சி ராமின் மகன் விஷால் விடுவிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்று அந்த வழக்கை விசாரித்த குழுவின் தலைவர் ஆர்.கே ஜல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பதான்கோட் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. முக்கிய குற்றவாளி சாஞ்சி ராம் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், தடையங்களை அழித்த போலீஸார்  3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.  சாஞ்சி ராமின் மகன் விஷாலுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், சந்தேகத்தின் பலனை அவருக்கு வழங்கி நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு ஆர்.கே. ஜல்லா வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆர்.கே.ஜல்லா பிடிஐ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சம்பவம் நடைபெற்ற கோயிலை பார்வையிட்ட பின்னர், அந்த கோயிலின் பொறுப்பாளர் சாஞ்சி ராம் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். அவரது மருமகன் உள்பட  குடும்பத்தினர் அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டோம். அவரது மகன் விஷால் குறித்து கேள்வி எழுப்பியபோது, தனது மகன் உத்தரப் பிரதேசம், மீரட்டில் தங்கி படிப்பதாக சாஞ்சி ராம் தெரிவித்தார். மேலும், அங்கு சென்று விசாரிக்குமாறும், விஷாலின் செல்லிடப்பேசி அழைப்புகளை சோதனை நடத்துமாறும் சாஞ்சி வலியுறுத்தினார். அப்போது என் மனதில் இரண்டு கேள்விகள்தான் எழுந்தன.

ஏன் என்னை மீரட்டுக்கு செல்லுமாறு சாஞ்சி ராம் வலியுறுத்துகிறார்? மற்றும் ஜனவரி மாதத்தில் கடும் குளிர் நிலவியபோதும், சஞ்சய் ராமுக்கு வியர்த்து கொட்டியது ஏன்? என்று தோன்றியது. அதை வைத்து ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை நாங்கள் உறுதி செய்தோம். இந்த வழக்கில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்களுக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நான் வழக்கை விசாரிக்கும்போது, பாஜக தலைவர்களிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பும் வரவில்லை. அரசியல் தலைவர்களிடம் இருந்து எனக்கோ, என் குழுவினருக்கோ எவ்வித அழுத்தமும் தரப்படவில்லை.

இந்த வழக்கு அனைவரது கூட்டு முயற்சியால்தான் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கில் வருத்தத்துக்குரிய விஷயம் ஒன்றுதான். சாஞ்சி ராமின் மகனுக்கு எதிராக சரியான ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டும் தான் வேதனையளிக்கிறது. விஷால் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com