ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்: பயங்கரவாதிகளுக்கு காஷ்மீர் ஆளுநர் அழைப்பு

ஆயுதங்களை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் ஆளுநர் சத்யபால் மாலிக்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் ஆளுநர் சத்யபால் மாலிக்.


ஆயுதங்களை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் தலைமையிலான அரசு நிர்வாகம் செய்த சாதனைகளை விளக்கும் வகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இதுகுறித்து அவர் கூறியதாவது: 
வன்முறைக்கு இந்தியா ஒருபோதும் தலை வணங்காது. எங்களிடம் இருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எங்களது உயிரையும் கொடுப்போம். ஆனால் அன்பு மற்றும் பேச்சுவார்த்தை மூலமே இது சாத்தியப்படும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தயாராக இருக்கிறார். நாங்களும் தயாராக இருக்கிறோம். ஆதலால் பேச்சுவார்த்தைக்கு வரும்படியும், அந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்லும்படியும் பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
எதை சாதிக்க வேண்டும் என்று விரும்பினாலும், அதை பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே சாதிக்கலாம். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக தனி அரசியலமைப்பு சட்டம் உள்ளது; தனி கொடியும் உள்ளது. ஆதலால் எதை பெற விரும்பினாலும், அதை ஜனநாயக நடவடிக்கைகள் மூலமாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகவும் நீங்கள் பெறலாம்.
உண்மை நிலவரத்தை பயங்கரவாதிகள் தற்போது வேண்டுமானால் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தவறான பாதையை தேர்வு செய்து விட்டதாக உணர்வார்கள். ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பயங்கரவாத பிரச்னைக்கு இளைஞர்களிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாட்ட பிரச்னை மட்டும் காரணமல்ல; பல ஆண்டுகளாக மக்களை அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்துவதும் ஒரு காரணமாகும்.
நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்ட பிரச்னை நிலவுகிறது. இதற்காக வேலையில்லாமல் இருக்கும் நபர்கள், அரசுக்கு எதிராக தங்களது கைகளில் ஆயுதங்களை தூக்குவதில்லை. 
காஷ்மீரில் அதை தாண்டியும் ஏதோ பிரச்னை உள்ளது. உண்மை நிலவரத்தை மக்களிடம் அரசியல் கட்சியினர் எடுத்துரைப்பதில்லை. மக்கள் அரசியல்வாதிகளால் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்; சுதந்திரம், தன்னாட்சி என்று தவறான கனவுகளை மக்களிடையே விதைக்கின்றனர். இந்த கனவுகள் ஒருபோதும் பூர்த்தியாகாது.
ஜம்மு-காஷ்மீரில் ஐ.எஸ். அமைப்பு காலூன்ற தொடங்கியுள்ளது. இது காஷ்மீருக்கு அழிவையே தரும். ஆதலால் மாநிலத்திலுள்ள இளைஞர்களை, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, ஆளுநர் மாளிகைக்கு வந்து என்னுடன் உணவருந்தும்படி அழைப்பு விடுக்கிறேன். அப்போது நீங்கள் தேர்வு செய்த பாதையால் காஷ்மீருக்கு என்ன நல்லது நடக்கும் என்பதை என்னிடம் தெரிவிக்கலாம். அமைதிப் பாதைக்கு இளைஞர்கள் திரும்ப அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். அது தேர்தல் ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட விவகாரம். அதுகுறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.
மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு, 35ஏ பிரிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தத்தமது தேர்தல் அறிக்கைகளில் பல கருத்துகளை வெளியிட்டுள்ளன. 
அதுகுறித்து பரவலாக விவாதிக்கப்பட்டும் வருகிறது. ஆனால், தற்போது அதுகுறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை. மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவதாக வெளியாகி வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் ஆகும். இதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை. எதையும் ஒரே இரவில் செய்து விட முடியாது. அது அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றார் சத்யபால் மாலிக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com