ஜூலை 15-இல் நிலவுக்குப் பயணமாகிறது சந்திரயான்-2 விண்கலம்

நிலவில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக ரூ.603 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி நிலவுக்குப் பயணமாகிறது.
ஜூலை 15-இல் நிலவுக்குப் பயணமாகிறது சந்திரயான்-2 விண்கலம்


நிலவில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக ரூ.603 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி நிலவுக்குப் பயணமாகிறது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவரும், மத்திய விண்வெளித் துறையின் செயலாளருமான கே. சிவன் செய்தியாளர்களிடம்  புதன்கிழமை கூறியது: 
விண்வெளி ஆராய்ச்சிக்காக இந்தியாவின் சார்பில் சந்திரயான்-1, மங்கள்யான்-1, ஆஸ்ட்ரோட்சாட் போன்ற விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக, நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவதற்காக சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட்டின் வழியாக ஏவப்படுகிறது. இதில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், ஜூலை 16 அல்லது 17-இல் விண்ணுக்குச் செலுத்துவோம். 
சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்ப்பிட்டர்(சுற்றுகலம்), லேண்டர் (தரையிறங்கி), ரோவர்(தரைசுற்றி வாகனம்) ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த பகுதி 1.3 டன் எடை கொண்டதாகும். விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டியுள்ளோம்.
ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட் மற்றும் ஒருங்கிணைந்த பகுதியின் எடை 3.8 டன் எடை கொண்டதாக இருக்கும். அதன் 15-ஆவது நிமிடத்தில் அந்த ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் விடுவிக்கப்பட்டு, பூமியில் இருந்து 170 கி.மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். 
அதன்பிறகு மேற்கொள்ளப்படும் 5 நகர்த்தல்கள் மூலம் பூமியில் இருந்து 170 கி.மீ. அருகிலும், 40,400 கி.மீ தொலைவிலும் 5 சுற்றுவட்டப் பாதையில் 16 நாள்கள் பயணித்து, இறுதியாக பூமியை சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, மற்றொரு நகர்த்தல் மூலம் நிலவின் வட்டப் பாதையில் சந்திரயான்-2 நிலைநிறுத்தப்படுகிறது. 
நிலவில் இருந்து 150 கி.மீ. அருகிலும், 18 ஆயிரம் கி.மீ. தொலைவில் நிலவு சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 பயணிக்கும். இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு, நிலவில் இருந்து 100 கி.மீ. சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டு வரப்படும்.  அதன்பிறகு சந்திரயான்-2 விண்கலத்தில் (ஆர்ப்பிட்டர்) வைக்கப்பட்டிருக்கும் லேண்டர் (விக்ரம்) விடுவிக்கப்பட்டு, படிப்படியாக 30 கி.மீ. தொலைவுக்கு இறக்கப்பட்டு, அதன்பிறகு 4 நாள்களில் நிலவில் தரையிறங்க மெதுவாகப் பயணிக்கும். 


இஸ்ரோ இதுவரை செலுத்தியிராத விண்வெளிப் பயணம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். லேண்டரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, செப். 6 அல்லது 7-ஆம் தேதி நிலவில் கால் பதிக்கும். 
சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய பிறகு, 4 மணி நேரத்தில் அதிலிருந்து ரோவர் (பிரக்யான்) மெல்லமெல்ல நிலவின் தரை மீதிறங்கும்.  லேண்டரும், ரோவரும் 14 நாள்கள் நிலவில் இருந்தபடியே ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடும். 
ஆர்பிட்டர், நிலவில் இருந்து 100 கி.மீட்டர் சுற்றுவட்டப் பாதையில் ஓராண்டுக்கு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடும். ஆனால், லேண்டர் மற்றும் ரோவர் 14 நாள்களுக்கு (ஒரு நிலவு நாள்) மட்டுமே ஆராய்ச்சி மேற்கொள்ளும். 
ஆர்ப்பிட்டரில் 8 ஆராய்ச்சிக் கருவிகளும்,  லேண்டரில் 3 ஆராய்ச்சிக் கருவிகளும், ரோவரில் 2 ஆராய்ச்சிக் கருவிகளும் இடம்பெற்றிருக்கும். நாசா அளித்துள்ள லேசர் ரெஃலெக்டர் ஆர்ரே கருவி நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவைக் கணக்கிடும். நிலவின் மேற்பரப்பில் மெக்னீஷியம், கால்ஷியம், இரும்பு உள்ளிட்ட கனிமங்கள், நீர் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்யும். 
இதுதவிர, நிலவு மேற்பரப்பின் வெப்பம், தட்பவெப்பம், வெப்பக்கடத்தல், வளிமண்டல பிளாஸ்மா போன்ற அறிவியல் கூறுகளும் ஆய்வுக்குள்படுத்தப்படும். நிலவின் வேதிகட்டமைப்பு, உள்ளடக்கம், கனிமங்களுக்காகவும் தேடுதல் நடைபெறும்.  ஆர்ப்பிட்டர், லேண்டர் பூமியோடு நேரடி தொடர்பில் இருக்கும். ரோவர், தனது தகவல்களை லேண்டர் வழியாக பரிமாற்றம் செய்யும்.  
ரூ.603 கோடி செலவில் உருவாக்கப்படும் இத்திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட தொழிலகங்கள், கல்வி நிறுவனங்கள் பங்காற்றியுள்ளன. எனவே, இது இந்திய மக்களின் கூட்டு முயற்சி என்று கொள்ளலாம். 
பலகட்ட ஆய்வு, சோதனைகளுக்குப் பிறகு சந்திரயான்-2 திட்டம் குறித்து ஜூன் 14-ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டு, பெங்களூரில் இருந்து ஆர்ப்பிட்டர் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு ஜூன் 17-ஆம் தேதி லேண்டர், ரோவர் அனுப்பப்படும்.  இந்தத் திட்டத்தின் இயக்குநராக பெண் விஞ்ஞானி வனிதா செயல்பட்டுவருகிறார். இந்தத் திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளில் 33 சதவீதம் பேர் பெண்கள் என்பது பெருமைக்குரியது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com