மதவாதத்துக்கு எதிராகக் கிடைத்த வெற்றி: அமித் ஷா

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியானது, மதவாதத்துக்கு எதிராகக் கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறினார். 
தில்லியில் உள்ள பாஜக  தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷாவை மாலை அணிவித்து வரவேற்கும் கட்சி மூத்த தலைவர்கள்.
தில்லியில் உள்ள பாஜக  தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷாவை மாலை அணிவித்து வரவேற்கும் கட்சி மூத்த தலைவர்கள்.


மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியானது, மதவாதத்துக்கு எதிராகக் கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறினார். 
தில்லியில், பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாகிகள், மாநிலங்களைச் சேர்ந்த அமைப்பு ரீதியிலான முக்கிய பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் அமித் ஷா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியதாக பாஜக பொதுச் செயலர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், பாஜக ஆட்சிக்கு வரும்போது கட்சி புதிய உச்சத்தை எட்டும் என்று அமித் ஷா கூறினார். அத்துடன், கட்சியில் கூடுதல் உறுப்பினர்களை சேர்க்கும் இயக்கம் தொடர்பான அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார். அனைத்து மாநிலங்களிலும் அமைப்பு ரீதியாக பாஜகவை விரிவுபடுத்துமாறும், கட்சியில் மேலும் அதிக உறுப்பினர்களை இணைக்குமாறும் பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். 
தேசியவாதம், நல்லாட்சி, ஏழைகளுக்கான நலன் போன்ற பாஜகவின் கொள்கைகளின் காரணமாகவே, நரேந்திர மோடி தலைமையிலான அரசு மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளதாக அமித் ஷா கூறினார். மேற்கு வங்கம், ஒடிஸா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக தன்னை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்த அமித் ஷா, கடந்த மக்களவைத் தேர்தலிலும் கட்சி சிறப்பாகக் செயல்பட்டுள்ளது என்றார். அதேபோல், இதுவரை பலம்பெறாத மாநிலங்களிலும் பாஜக தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் என்றார் அமித் ஷா. 
மக்களவைத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த ஆதரவாளர்களை அவர் பாராட்டினார். மக்களின் இந்தத் தீர்ப்பு ஜாதி அரசியல், ஒரு குடும்ப ஆட்சி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு எதிரானது என்று குறிப்பிட்ட அமித் ஷா, உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி கண்ட தோல்வியின் மூலம், ஜாதி அடிப்படையிலான கட்சிகளின் பலம் தொடர்பாக நிலவிய கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றார். 
பாஜகவில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஜக துணைத் தலைவர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் நடைபெறவுள்ள அந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கத்துக்கான தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படும். துஷ்யந்த் கெளதம், சுரேஷ் புஜாரி, அருண் சதுர்வேதி, ஷோபா சுரேந்திரன் ஆகியோர் அந்த இயக்கத்தின் துணை பொறுப்பாளர்களாக இருப்பர். 
அதைத் தொடர்ந்து கட்சியின் அமைப்பு ரீதியிலான தேர்தல்கள் நடைபெறும். அந்தத் தேர்தல் நிறைவடையும் வரையில் அமித் ஷா கட்சியின் தேசியத் தலைவராகத் தொடருவார். கட்சியில் தேர்தல் நடவடிக்கைகள் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால், அமித் ஷா தலைமையிலேயே ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை பாஜக எதிர்கொள்ளும் என்று பூபேந்தர் யாதவ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com