மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

அடுத்த 48 மணிநேரத்தில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

அடுத்த 48 மணிநேரத்தில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக் குறைவுதான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனைக்குள் கடந்த திங்கள்கிழமை இரவு நுழைந்த ஒரு கும்பல், இளநிலை மருத்துவர்கள் இருவரை சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கியது. இதில் ஒரு மருத்துவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார். 

மேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த அரசு மருத்துவர்கள்  தங்கள் பதவியை ராஜிநாமா செய்து எதிர்ப்பைப் வெளிப்படுத்தியுள்ளனர்.

மாநிலத்தில் பயிற்சி மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை 4-ஆவது நாளாக நீடித்தது. இதன் காரணமாக,  அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பணிக்கு திரும்பாத இளநிலை மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்திருந்த நிலையில், அதை மீறி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் பல லட்சம் மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் மம்தா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது தனது கெளரவப் பிரச்னை ஏன்று பார்க்காமல், சுமூகத்தீர்வுகாண வேண்டும் என்று மம்தா பானர்ஜிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தியுள்ளார். 

மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு வலுத்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உறைவிட மருத்துவர்கள் 4,500 பேர் வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். அதேபோல, உத்தரப் பிரதேசம், ஒடிஸா, கோவா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் மருத்துவர்கள் பல்வேறு வகைகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

17-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மருத்துவர் சங்கத்தின் 1,700 கிளைகள் சார்பில் 3.5 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்றனர். இப்போராட்டங்கள் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தொடரும். ஜூன் 17-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மேற்கு வங்க மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 
மேலும், தாக்குதலில் காயமடைந்த மருத்துவர்களை முதல்வர் நேரில் சென்று பார்க்க வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார். இவற்றை நிறைவேற்றும் பட்சத்தில் போராட்டம் கைவிடப்படும் என்றார்.

இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேரங்கள் கெடு விதித்துள்ளனர். அதற்குள்ளாக 6 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும், மறுத்தால் காலவரையற்ற போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com