தில்லியில் எம்.பி.க்களுக்கு 400 புதிய குடியிருப்புகள்: பழைய கட்டட இடிபாடுகளைப் பயன்படுத்த முடிவு

தில்லியில் நார்த், சௌத் அவென்யுவில் உள்ள எம்.பி.க்களின் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 400 புதிய குடியிருப்புகளைக் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள எம்பிக்களின் டூப்லக்ஸ் குடியிருப்புகள்.
புதிதாக கட்டப்பட்டுள்ள எம்பிக்களின் டூப்லக்ஸ் குடியிருப்புகள்.

தில்லியில் நார்த், சௌத் அவென்யுவில் உள்ள எம்.பி.க்களின் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 400 புதிய குடியிருப்புகளைக் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. பழைய குடியிருப்புகளின் இடிபாடுகளைப் பயன்படுத்தியே புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்று மத்திய பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் குடியரசுத் லைவர் மாளிகை அருகே அமைந்துள்ள நார்த், சௌத் அவென்யுவில் சுமார் 400 எம்.பி.க்கள் குடியிருப்புகள் உள்ளன. 
இவை நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கட்டப்பட்டவையாகும். சுமார் 60 ஆண்டு பழைமை வாய்ந்த இந்தக் கட்டடங்களை அவ்வப்போது பொதுப் பணித்துறை சீரமைத்து எம்.பி.க்களுக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில், எம்பிக்களுக்காக 36 டூப்லக்ஸ் குடியிருப்புகளை ரூ. 80 கோடி செலவில் பொதுப் பணித்துறை கட்டி முடித்துள்ளது.
இந்த குடியிருப்புகள் 17-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது.

நார்த் அவென்யுவில் உள்ள எம்பிக்களின் பழைய குடியிருப்புகள்

இதேபோல், நார்த், சௌத் அவென்யுவில் உள்ள அனைத்து பழைய எம்பிக்களின் குடியிருப்புகளை இடித்து புதிய குடியிருப்புகள் கட்ட பொதுப் பணித்துறை திட்டமிட்டுள்ளதாக மத்திய பொதுப் பணித்துறையின் டிஜி பிராபாகர் சிங் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நார்த், சௌத் அவென்யுவில் உள்ள சுதந்திரத்துக்கு பின்னர் கட்டப்பட்ட எம்.பி.க்களின் அனைத்து குடியிருப்புகளும் இடிக்கப்படும். அந்த பழைய கட்டடங்களின் இடிபாடுகளை புதிய கட்டடங்கள் கட்ட பயன்படுத்தப்படும்.
பழைய கட்டடங்கள் இடிக்கப்படுவதால் தற்போதைய எம்.பி.க்கள் தங்குவதற்கு எந்தவித குறைபாடும் இல்லாத வகையில் ஒவ்வொரு கட்டமாக பணிகள் செயல்படுத்தப்படும். இந்த புதிய கட்டடங்களில் சூரிய ஒளி மின்சாரம், தனியாக வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் என்றார்.
நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களில் சுமார் 300 பேர் முதல் முறை எம்.பி.க்களாவர். இவர்களுக்கு தில்லியின் முக்கிய இடமான லுட்டியன்ஸ் பகுதியில் குடியிருப்பபுகளை ஒதுக்க அரசு தற்காலிக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
முன்பு அரசு குடியிருப்புகள் ஒதுக்கப்படாத எம்.பி.க்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது வழக்கம். ஆனால், சிக்கன நடவடிக்கையின் காரணமாக இந்த வழக்கத்தை மக்களவைச் செயலகம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com