மத்திய சுகாதார அமைச்சகம், பிகார் அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம்

முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளையழற்சி நோய்க்கு ஏராளமான குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், பிகார் அரசு ஆகியவற்றுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம்


முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளையழற்சி நோய்க்கு ஏராளமான குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், பிகார் அரசு ஆகியவற்றுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் இதுவரை மூளையழற்சி நோய்க்கு ஏராளமான குழந்தைகள் உயிரிழந்து விட்டன. மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, இந்நோய் பாதிப்புக்கு ஆளான குழந்தைகளுக்கு சரிவர சிகிச்சை கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், பிகார் அரசு ஆகியவற்றுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்களை திங்கள்கிழமை அனுப்பியுள்ளது. இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் மட்டும் மூளையழற்சி நோய்க்கு குழந்தைகள் அதிக அளவில் உயிரிழந்து விட்டதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. 
தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்துவதிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் நிலவும் குறைபாடுதான், குழந்தைகள் அதிக அளவில் உயிரிழந்திருப்பதற்கு காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருதுகிறது.
ஆதலால், இந்த விவகாரத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக செயலர், பிகார் மாநில தலைமைச் செயலர் ஆகியோருக்கு இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை அளிக்கக்கோரி, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. 
அதில் மூளையழற்சியை கட்டுப்படுத்துவது தொடர்பான தேசிய திட்டத்தை செயல்படுத்தியது, தற்போதைய நிலவரத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாநில அரசால் அளிக்கப்படும் நிவாரணம் உள்ளிட்டவை குறித்து 4 வார காலத்துக்குள் விரிவான அறிக்கை அளிக்கும்படி கோரப்பட்டுள்ளது என்றார் அவர்.
மேலும் 6 குழந்தைகள் உயிரிழப்பு: இதனிடையே, முசாஃபர்பூரில் மூளையழற்சி நோய்க்கு மேலும் 6 குழந்தைகள் திங்கள்கிழமை உயிரிழந்தன. 
இதைத் தொடர்ந்து, மூளையழற்சிக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com