ஒரே தேசம், ஒரே தேர்தல்: குழு அமைக்கப்படும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

ஒரே தேசம், ஒரே தேர்தல் குறித்து ஆலோசனைகளை பெறுவதற்காக குழு அமைக்கப்படும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒரே தேசம், ஒரே தேர்தல்: குழு அமைக்கப்படும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி உரை


ஒரே தேசம், ஒரே தேர்தல் குறித்து ஆலோசனைகளை பெறுவதற்காக குழு அமைக்கப்படும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

ஒரே தேசம், ஒரே தேர்தல், நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தின கொண்டாட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு, தில்லியில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டிஆர்எஸ் கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, இந்த கூட்டமானது இன்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் சி.வி. சண்முகம் தில்லி சென்றிருந்தார். எனினும், அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

இந்த நிலையில், இந்த கூட்டமானது சுமார் மூன்றரை மணி நேரத்துக்குப் பிறகு நிறைவடைந்தது. 

இதையடுத்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் இந்த கூட்டம் குறித்து விளக்கம் அளிக்கையில், 

"40 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், 21 கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு காரணங்களுக்காக இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். 3 கட்சிகள் தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக பதிவிட்டனர். 

ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பெரும்பாலான கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இதில் மாற்றுக் கருத்து உள்ளது. ஆனால், இந்த சிந்தனையை அவர்கள் எதிர்க்கவில்லை. இதை செயல்படுத்தும் விதத்தை தான் அவர்கள் எதிர்க்கின்றனர்.

ஒரே தேசம், ஒரே தேர்தல் விவகாரம் குறித்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் பரிந்துரை மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com