பிகாரில் குழந்தைகள் பலி 115-ஆக அதிகரிப்பு

பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 115-ஆக அதிகரித்துள்ளது.
மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, முசாஃபர்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள்.
மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, முசாஃபர்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள்.


பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 115-ஆக அதிகரித்துள்ளது.
முசாஃபர்பூரிலுள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கேஜரிவால் மருத்துவமனை ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை இரவில் மேலும் சில குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்தது.
ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 1-ஆம் தேதி முதல் மொத்தம் 372 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டன. இதில் 93 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டன. 118 குழந்தைகள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ளவர்களில் ஆபத்தான நிலையில் இருக்கும் குழந்தைகளை,  பாட்னாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறோம். சில குழந்தைகளுக்கு இந்த மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், தர்பங்கா, சுபால், மதுபானி ஆகிய மாவட்டங்களிலிருந்து 11 மருத்துவ அதிகாரிகள்  முசாஃபர்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 மாவட்டங்களிலிருந்து குழந்தைகள் சிகிச்சை நிபுணர்கள் முசாஃபர்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக, முசாஃபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் நிதீஷ் குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நிலைமையை கேட்டறிந்த அவர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதேசமயம், குழந்தைகள் உயிரிழப்பைக் கண்டித்து, முதல்வருக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன.
இதனிடையே, இந்த விவகாரத்தில் அலட்சியத்துடன் செயல்படுவதாக, முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் மோடி, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மாநில சுகாதார அமைச்சர் மங்கள்பாண்டே உள்ளிட்டோர் மீது முசாஃபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முசாஃபர்பூரைச் சேர்ந்த முகமது நசீம் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
ராஜஸ்தானில் முன்னெச்சரிக்கை: பிகாரில் மூளை அழற்சியால் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்ந்து வரும் சூழலில், ராஜஸ்தானில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com