என்னை கோவாவின் குப்பைத்துறை அமைச்சர் ஆக்குங்கள்: பாஜக எம்.எல்.ஏவின் வினோத வேண்டுகோள் 

என்னை குப்பைத்துறை அமைச்சர் ஆக்குங்கள் என்று கோவா மாநில பாஜக எம்.எல்.ஏவும், துணை சபாநாயகருமான மைக்கேல் லோபோ முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என்னை கோவாவின் குப்பைத்துறை அமைச்சர் ஆக்குங்கள்: பாஜக எம்.எல்.ஏவின் வினோத வேண்டுகோள் 

பனாஜி: என்னை குப்பைத்துறை அமைச்சர் ஆக்குங்கள் என்று கோவா மாநில பாஜக எம்.எல்.ஏவும் , துணை சபாநாயகருமான மைக்கேல் லோபோ முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசில் மைக்கேல் லோபோ துணை சபாநாயகராக பணியாற்றி வருகிறார். இவர் 2017-ஆம் ஆண்டு கோவாவில் பாஜக கூட்டணி ஆட்சியமைத்த போது அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். அப்போதே அவருக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அவருக்கு எதுவும் அளிக்கப்படவில்லை. இதுதொடர்பான தனது அதிருப்தியை அவர் அப்போதே வெளிப்படுத்தி இருந்தார்.  

அதேபோல் கடந்த வாரம் முதல்வர் சாவந்த்தைச் சந்தித்த லோபோவிடம், அமைச்சரவையில்  இடம்பெறுவது குறித்து முதல்வர் உறுதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் என்னை குப்பைத்துறை அமைச்சர் ஆக்குங்கள் என்று மைக்கேல் லோபோ முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய லோபோ கூறியதாவது:

மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றவதற்கு சரியான வழிமுறைகள் இல்லாமல் இருப்பது, சுற்றுலாவில் புகழ்பெற்று விளங்கும் கோவா மாநிலத்திற்கு பெரும் பாதிப்பாக இருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளாக இதுதொடர்பாக பல்வேறு எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நாடு திரும்பி ஒன்றுமே செய்ததில்லை.

எனவே குப்பைக்கென்று ஒரு தனி அமைச்சரவையை நிறுவ வேண்டும். எத்தனையோ துறைகளுக்கென்று அமைச்சரவைகள் இருக்கின்றன. ஒருவேளை இதை மோசமாக யாரேனும் நினைக்கலாம்.  யாரும் இதற்கு அமைச்சராக விரும்பாமல் இருக்கலாம். ஆனால் நான் தயாராக இருக்கிறேன். என்னை குப்பைத்துறை அமைசசர் ஆக்குங்கள்.

இந்த அமைச்சரவையானது பல்வேறு பணப் பரிமாற்றங்களின் போது மாநில அரசானது  வசூலிக்கும் 'குப்பை வரியி ல்’ இருந்து மட்டுமே முழுமையாக இயங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com