மோடி, ஷி ஜின்பிங், புதின் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜி20 மாநாட்டில் நடைபெறுகிறது

ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர்
புதின், ஷி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி (கோப்புப் படம்)
புதின், ஷி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி (கோப்புப் படம்)


ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் சந்தித்துப் பேச இருக்கின்றனர்.
சமீபகாலமாக அமெரிக்கா தங்களது வர்த்தக நலன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சீனா, இந்தியா ஆகிய நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பெரும் வரிவிதிப்பு யுத்தமே நடைபெற்று வருகிறது. தங்கள் நாட்டுப் பொருள்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். இந்த சூழ்நிலையில் மோடி, ஷி ஜின்பிங், புதின் ஆகியோர் சந்தித்துப் பேச இருக்கின்றனர். அதில் தங்கள் வர்த்தக நலன்களுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து மூன்று தலைவர்களும் முக்கியமாக விவாதிக்க இருக்கின்றனர். அமெரிக்காவுக்கு எதிராக மூன்று பெரிய நாடுகளின் தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்துவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஷி ஜின்பிங், புதின் ஆகியோருடன் சிறப்பான நட்புறவை மோடி வளர்த்துள்ளார். எனவே, இந்த சந்திப்பு இந்தியாவுக்கு பல்வேறு நிலைகளில் சாதகமாக அமைவதுடன், இந்தியாவின் முக்கியத்துவத்தை பிற நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் மாநாட்டிலும் மோடி-ஷி ஜின்பிங்-புதின் சந்தித்துப் பேசினர்.
அண்மையில்,  அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட் உள்ளிட்ட சில பருப்பு வகைகள் என 29 பொருள்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா அதிகரித்தது. 
முன்னதாக, உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் எனவும், விவசாயப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், பொறியியல் சாதனங்கள் ஆகியவற்றின் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால், தனது முடிவில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. மேலும், வரி விதிப்பு விஷயத்தில் இந்தியாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதையடுத்து, அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீதான வரியை இந்தியா அதிரடியாக அதிகரித்தது.
அமெரிக்கா ஒத்துழைக்க வேண்டும்- சீனா: இதனிடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஒத்துழைக்க வேண்டுமென சீனா கூறியுள்ளது.
ஜி20 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசவிருக்கும் சூழலில், சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.
சீன வர்த்தக துணை அமைச்சர் வாங் ஷூவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரு நாட்டு அதிபர்களின் சந்திப்புக்காக சீனா, அமெரிக்கா நாடுகளின் குழுக்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பிரச்னையில், பரஸ்பர புரிதல், நம்பிக்கை, இறையாண்மைக்கு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்க்கமான முடிவெடுக்க முடியும்.
இதில், இரு நாடுகளுக்கும் சாதகமான சூழல் நிலவ வேண்டுமெனில், இரு நாடுகளும் சமரசம் செய்துகொண்டு, பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஒரு நாடு மட்டும் சமரசம் செய்துகொண்டு, மற்றொரு நாடு பிடிவாதமாக இருந்தால், எந்த முடிவையும் எட்ட முடியாது. உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின் அடிப்படையில் சமரசம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com