குஜராத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

குஜராத்திலுள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு தனித்தனியாக இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தொடுக்கப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
குஜராத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்


குஜராத்திலுள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு தனித்தனியாக இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தொடுக்கப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் எம்.பி.யாக முன்பு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதனிடையே அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அந்த அவையின் எம்.பி.க்களாக அவர்கள் இருவரும் தேர்வாகினர். இதனால் குஜராத் மாநிலத்தில் அவர்கள் எம்.பி.க்களாக இருந்த 2 மாநிலங்களவை இடங்களும் காலியாகின. எனவே அந்த 2 இடங்களுக்கும் தனித்தனியாக இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பரேஷ்பாய் தனானி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2 மாநிலங்களவை இடங்களுக்கும் தனித்தனியாக இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது, அரசியலமைப்பு சட்டத்தின் 14ஆவது விதிக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய் ஆகியோரைக் கொண்ட விடுமுறை கால அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், இடைத் தேர்தல் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. ஆதலால் இதில் உச்சநீதிமன்றம் தலையிடாது. இடைத் தேர்தல் விவகாரத்தில் என்ன அடிப்படை உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது என்பது சாதாரண உரிமைதான். ஆதலால் இந்த விவகாரத்தில் தேர்தல் முடிந்ததும், உயர்நீதிமன்றத்தை அணுகலாம். அல்லது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றனர்.
மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பான மனுக்களில் உச்சநீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்புகளையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
முன்னதாக, குஜராத் மாநிலத்தில் உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு ஒரே நாளில் இடைத்தேர்தல் நடத்தாமல், தனித்தனியாக இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பான முடிவை எடுத்தது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருந்தது. அதில், மாநிலங்களவை உள்பட அனைத்து அவைகளிலும் காலியாக இருக்கும் இடங்களுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும்போது, அந்த இடங்கள் தனித்தனியான கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படும், அதுதொடர்பாக தனித்தனி தேர்தல் அறிவிக்கையே வெளியிடப்படும், தனித்தனியாகவே தேர்தல் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com