நீட் தேர்வு மறுகூட்டல் கோரும் மனு: தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

2019-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் விடைத்தாள்களை மறுகூட்டல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீட் தேர்வு மறுகூட்டல் கோரும் மனு: தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

2019-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் விடைத்தாள்களை மறுகூட்டல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக, நீட் தேர்வெழுதிய சில மாணவர்கள் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:
நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கான மாதிரி விடைக் குறிப்புகள் கடந்த மாதம் 29-ஆம் தேதி வெளியிடப்பட்டன. வினாத்தாளில் உள்ள 4 கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியாக உள்ளன. ஆனால், விடைக் குறிப்பில் குறிப்பிட்ட ஒரு விடை மட்டுமே சரியெனக் குறிக்கப்பட்டுள்ளது.
இதைக் கவனத்தில் கொள்ளாமல், இறுதி விடைக் குறிப்புகளும், தேர்வு முடிவுகளும் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. எனவே, அந்த 4 வினாக்களையும் தவிர்த்துவிட்டு மாணவர்களின் விடைத்தாள்களை மறுகூட்டல் செய்து புதிய முடிவுகளை வெளியிட வேண்டும். ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயந்த் நாத் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிபதி கூறியதாவது:
குறிப்பிட்ட வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருப்பதை மனுதாரர்கள் நிரூபிக்கத் தவறிவிட்டனர். மனுதாரர்கள் இணைத்துள்ள ஆதாரங்கள், இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்குப் போதுமானதாக இல்லை. நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு மையமும் (என்டிஏ) எந்தக் குளறுபடியிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. எனவே, மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கை தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசு, தேசிய தேர்வு மையம், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றார்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதம் 4-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com