விசாரணை கைதி உயிரிழப்பு விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

விசாரணை கைதி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில், முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தன


விசாரணை கைதி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில், முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தன. 
கேரளத்தில் கடந்த 12ஆம் தேதி ராஜ்குமார் (49) என்பவரை, நிதி மோசடி புகாரின் கீழ் விசாரணைக்காக  போலீஸார் அழைத்து சென்றனர். விசாரணையின்போது, போலீஸாரால் கடும் சித்ரவதைக்கு ஆளான அவர் பீர்மேடு கிளைச்சிறையில் 21ஆம் தேதி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.  
இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்து ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் (யூடிஎஃப்) சேர்ந்த எம்எல்ஏ பி.டி.தாமஸ் பேசும்போது, இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீஸுக்கு மாற்றி, இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
இதற்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலளிக்கையில்,  இந்த தாக்குதலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஏற்கனவே 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது எதிர்பாராமல் நடைபெற்ற துயரச்சம்பவம் ஆகும் என்றார். 
முதல்வரின் பதிலில் திருப்தியடையாத எம்எல்ஏ தாமஸ் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில்,  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜ்குமார் 105 மணி நேரத்துக்கு பிறகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற குறைந்தபட்ச விதிமுறையை கூட காவல்துறை கடைபிடிக்கவில்லை. நேர்மையான மற்றும் புகழ்பெற்ற அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு, கறைபடிந்த அதிகாரிகள் பொறுப்பில் வைத்துள்ளதால்  இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
ஏற்கனவே வரபுழாவில் ஸ்ரீஜித் விசாரணைக்கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு  உயிரிழந்த சம்பவத்திலும் முறையான நீதி விசாரணை நடைபெறவில்லை. மோசமான காவல்துறை அதிகாரிகளுக்கு அரசு துணை போகிறது என்று குற்றம்சாட்டினார். 
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், இந்த விவகாரத்தை அரசு பொருட்படுத்தாததால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். 
இனிவரும் தினங்களில் விசாரணைக் கைதிகள் உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்தால் சம்மந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 
ஒத்திவைப்பு தீர்மானத்தை பேரவைத்தலைவர் நிராகரித்ததையடுத்து அதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி எதிர்க்கட்சியினர் அவையை விட்டு வெளியேறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com