பிராந்திய மொழிகளில் வங்கித் தேர்வுகள் நடத்தக் கோருவது பரிசீலிக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கிப் பணிக்கான தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்த தென்மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பிராந்திய மொழிகளில் வங்கித் தேர்வுகள் நடத்தக் கோருவது பரிசீலிக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


வங்கிப் பணிக்கான தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்த தென்மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் வியாழக்கிழமை கூறினார். 
மாநிலங்களவையின் பூஜ்ய நேரத்தின்போது கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.பி.யான ஜி.சி. சந்திரசேகர் இந்த விவகாரத்தை  எழுப்பினார். இந்திய வங்கிப் பணிகளுக்கான தேர்வுகள் மற்றும் இதர பணிகளுக்கான தேர்வுகளை, கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளுடன், கன்னட மொழியிலும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் உள்ள எம்.பி.க்கள் சிலரும் இதே விவகாரத்தை எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம், தனக்கென தனி மொழியைக் கொண்டுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்புடைய ஒன்றாகும். தீவிரமான இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளேன். பிராந்திய மொழிகளிலும் வங்கிப் பணிக்கான தேர்வுகளை நடத்துவது தொடர்பான கோரிக்கையை பரிசீலித்து, அவையில் அதுதொடர்பாக பதிலளிப்பேன் என்றார். 
முன்னதாக, காங்கிரஸ் உறுப்பினரான ஜி.சி. சந்திரசேகர் தனது இந்த கோரிக்கையை அவையில் எழுப்பியபோது கன்னட மொழியில் பேசினார். அவையில் அப்போது மொழிபெயர்ப்பு வசதி இல்லாததை அடுத்து, சந்திரசேகரின் கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவரான வெங்கய்ய நாயுடு மொழிபெயர்த்து அவையில் கூறினார். 
மேலும், அவை உறுப்பினர்கள் தங்களது பிராந்திய மொழியிலோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலோ உரையாட விரும்பும் பட்சத்தில், அவர்களுக்கான மொழிபெயர்ப்பு வசதியை ஏற்படுத்த வசதியாக முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்க வேண்டியது அவசியமாகும் என்று வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com