இந்தியா திரும்புவது எப்போது? மல்லையாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

இந்தியாவுக்கு திரும்பி வந்து, வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளப் போவது எப்போது என்று தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு  மும்பை உயர்நீதமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா திரும்புவது எப்போது? மல்லையாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி


இந்தியாவுக்கு திரும்பி வந்து, வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளப் போவது எப்போது என்று தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு  மும்பை உயர்நீதமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதனிடையே, மத்திய அரசு புதிதாக இயற்றியுள்ள தலைமறைவு நிதி மோசடியாளர் சட்டத்தின் கீழ் தலைமறைவு நிதி மோசடியாளராக, மல்லையா கடந்த ஜனவரி 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் மல்லையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் இந்திரஜித் மஹந்தி, சாரங்க் கோத்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, மல்லையா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமித் தேசாய் முன்வைத்த வாதம்: 
வங்கிகளில் இருந்து வாங்கியுள்ள கோடிக்கணக்கான ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த விரும்புவதாக மல்லையா ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் புதிய சட்டப்படி, அவர் தலைமறைவு நிதி மோசடியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது, சட்ட விரோதமான அறிவிப்பாகும். 
இந்த அறிவிப்பின் மூலம், அவருடைய அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு கடனளித்த வங்கிகளுக்கு பாதிப்பே ஏற்படும் என்று அமித் தேசாய் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மல்லையா இந்தியா திரும்பி, வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளத் தொடங்கியவுடன், அவர் மீதான மோசடியாளர் முத்திரை மறைந்து விடும். எனவே, அவர் எப்போது இந்தியா வருவார்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமித் தேசாய்,  மல்லையா பிரிட்டனில் இருந்து வெளியேறுவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றார். அதற்கு, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லையா நீதிமன்றத்தை நாடியதால்தான், பிரிட்டன் நீதிமன்றம் பாதுகாப்பு கருதி, அவர் நாட்டை விட்டு வெளியேற கட்டுப்பாடு விதித்துள்ளது. எனினும், அவர் தாமாக, இந்தியாவுக்கு திரும்பலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் 8-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com