இந்தியாவின் அதிரடித் தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் இறந்தனர் என கணக்கிட முடியாது: விமானப் படை தளபதி

பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு இந்திய விமானப் படை தளபதி தனோவா பதில் அளித்துள்ளார்
இந்தியாவின் அதிரடித் தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் இறந்தனர் என கணக்கிட முடியாது: விமானப் படை தளபதி


கோவை: பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு இந்திய விமானப் படை தளபதி தனோவா பதில் அளித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை விமானங்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியது.

இந்த  தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு இந்திய விமானப் படை தளபதி பி.எஸ். தனோவா கோவையில் இன்று முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்திய விமானப் படை தாக்குதலுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள சூலூர் விமானப் படை தளம் வழக்கம் போல சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்றார்.

அவரிடம், இந்திய எல்லையைத் தாண்டி வந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் நவீன எஃப்-16 விமானத்துக்கு எதிராக இந்திய விமானப் படையின் மிகப் பழமையான மிக்-21 ரக விமானம் பயன்படுத்தப்பட்டது ஏன்? என்று செய்தியாளர் கேட்டதற்கு, இந்திய விமானப் படையில் இருக்கும் மிக் - 21 ரக போர் விமானம் பழைய விமானம் அல்ல, மேம்படுத்தப்பட்ட விமானம், 3வது தலைமுறையாக இந்திய விமானப் படையில் இணைந்து பணியாற்றும் நவீன அம்சங்களுடன் கூடியதே மிக் -21 ரக போர் விமானமாகும் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்களில் எத்தனை பேர் இருந்தனர் என்பதைப் பொறுத்ததே. தாக்குதலில் எவ்வளவு பேர் இறந்தனர்? என்பதை நம்மால் கணக்கிட முடியாது என்று இந்திய விமானப் படை தளபதி தனோவா தெரிவித்தார். மேலும், நாம் இலக்கை சரியாக தாக்கியதால்தான் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.

விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பற்றிய கேள்விக்கு, அபிநந்தனுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல் தகுதி உறுதி செய்யப்பட்ட பிறகு அவர் பணியில் மீண்டும் இணைவார் என்று தெரிவித்தார்.

ரஃபேல் போர் விமானங்கள் குறித்து கேட்டதற்கு, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என்று தனோவா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com