ரஃபேல் ஆவணங்களை திருடியவரே திருப்பிக் கொடுத்து விட்டாரா? ப.சிதம்பரம் விமர்சனம்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்களை, பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடியவரே திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விட்டாரா? என்று
ரஃபேல் ஆவணங்களை திருடியவரே திருப்பிக் கொடுத்து விட்டாரா? ப.சிதம்பரம் விமர்சனம்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்களை, பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடியவரே திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விட்டாரா? என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
 ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்த நடைமுறையில் சந்தேகம் கொள்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
 இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், "ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள், பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளன' என்றார். மேலும், "அந்த ஆவணங்களின் அடிப்படையில்தான் ஓர் ஆங்கில நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்தக் குற்றச் செயலுக்கு ரகசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்' என்று கூறியிருந்தார்.
 இதையடுத்து, பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்தே ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதா? என்று வியப்படைந்த எதிர்க்கட்சிகள், மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தன. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
 இந்நிலையில், பிடிஐ செய்தியாளருக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த கே.கே.வேணுகோபால், "ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் திருடப்படவில்லை. அந்த ரகசிய ஆவணங்களின் நகல்களை மனுதாரர்கள் தங்களது மனுவில் இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதைத்தான் நீதிமன்றத்தில் தெரிவித்தேன்' என்றார்.
 இந்நிலையில், அட்டர்னி ஜெனரல் அளித்த விளக்கத்தை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
 கடந்த புதன்கிழமை, ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டன; வெள்ளிக்கிழமை, அவை நகல் எடுக்கப்பட்ட ஆவணமாக மாறியுள்ளன. இதற்கிடையே, வியாழக்கிழமை, அந்த ஆவணங்களைத் திருடியவரே திரும்பக் கொண்டு வந்து கொடுத்திருக்க வேண்டும். புதன்கிழமை, அலுவலக ரகசியச் சட்டத்தின் தண்டனைப் பிரிவை கூறிய அரசுத் தரப்பு, தற்போது சமாதான வார்த்தைகளைக் கூறுகிறது. அவர்களின் அடிப்படை அறிவுக்கு தலை வணங்குகிறோம் என்று ப.சிதம்பரம் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 3 முக்கிய பிரச்னைகள்: இதனிடையே, "வரும் மக்களவைத் தேர்தலில் மூன்று முக்கிய விஷயங்கள் பிரதானமாக இருக்கும். அவை, வேலை, வேலை, வேலை' என்று மற்றொரு பதிவில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லையா? அல்லது வேலை வாய்ப்புகள் உருவாக்கம் குறித்து பொய்யான தகவல்கள் வெளியிடப்படுகின்றதா? என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு இந்த இரண்டு தவறுகளையும் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com