அயோத்தி விவகாரம்: மத்தியஸ்தர் குழு முன் மனுதாரர்கள் ஆஜர்

அயோத்தி ராம ஜென்மபூமி-பாபர் மசூதி விவகாரத்தில் தீர்வு காணும்பொருட்டு, உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்தர் குழு முன் மனுதாரர்கள் புதன்கிழமை ஆஜராகினர்.
அயோத்தி விவகாரம்: மத்தியஸ்தர் குழு முன் மனுதாரர்கள் ஆஜர்

அயோத்தி ராம ஜென்மபூமி-பாபர் மசூதி விவகாரத்தில் தீர்வு காணும்பொருட்டு, உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்தர் குழு முன் மனுதாரர்கள் புதன்கிழமை ஆஜராகினர்.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய தரப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதிகட்ட விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் விரைவில் தொடங்கவுள்ளது. 
அதற்குள் இந்த விவகாரத்துக்கு மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திய நீதிமன்றம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழுவை அமைத்தது. அதில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் 8 வாரத்துக்குள் தீர்வு காண முயல வேண்டுமென மத்தியஸ்தர் குழுவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்தியஸ்தர் குழு தனது பணியை உத்தரப் பிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்டத்தில் உள்ள அவத் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இந்த வழக்கின் மனுதாரர்கள் அனைவரும் தங்களது வழக்குரைஞர்களுடன் மத்தியஸ்தர் குழு முன் ஆஜராகினர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: இது தொடர்பாக ஃபைசாபாத் மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியஸ்தர் குழு உறுப்பினர்கள், செவ்வாய்க்கிழமை ஃபைசாபாதை வந்தடைந்தனர். மாவட்டத்தில் அவர்கள் 3 நாள்கள் தங்க உள்ளனர். மனுதாரர்களுக்கும், அவர்களது வழக்குரைஞர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் மத்தியஸ்தர் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
புதன்கிழமை தொடங்கிய மத்தியஸ்த கூட்டத்தில் பங்குபெறுமாறு 25 மனுதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களது வழக்குரைஞர்களுடன் சேர்த்து 50க்கும் மேற்பட்ட நபர்கள் இதில் பங்கேற்றனர். மத்தியஸ்தம் நடைபெறும் பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். 
இதில், ராம ஜென்மபூமி பன்ருத்தர் சமிதி தரப்பில் பங்கேற்ற சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் கூறுகையில், காலை 10 மணிக்கு மத்தியஸ்த கூட்டம் தொடங்கியது. இதில், மதநல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகையில் விவாதங்கள் நடைபெற்றன என்றார்.
முக்கிய நபர்கள்: இந்த மத்தியஸ்த கூட்டத்தில், உத்தரப் பிரதேச மாநில அரசின் தலைமை வழக்குரைஞர் ராகவேந்திர சிங், அரசு கூடுதல் வழக்குரைஞர் மதன் மோகன் பாண்டே, நிர்மோஹி அகாரா அமைப்பைச் சேர்ந்த மஹந்த் தினேந்திர தாஸ், ராம் லல்லா தரப்பில் திரிலோகி நாத் பாண்டே , சன்னி வக்ஃபு வாரிய உறுப்பினர்கள், ஹிந்து மகாசபையைச் சேர்ந்த சுவாமி சக்ரபாணி மற்றும் கமலேஷ் திவாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், ராம் அபிராம் தாஸ் அமைப்பைச் சேர்ந்த மஹந்த் தரம் தாஸ், திகம்பர் அகாராவைச் சேர்ந்த மஹந்த் சுரேஷ் தாஸ், உத்தரப் பிரதேச ஷியா வக்ஃபு வாரியத் தலைவர் வாசீம் ரிஜ்வி, மனுதாரர்கள் இக்பால் அன்சாரி, முகமது உமர், ஹாஜி மஹ்பூப் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com