சம்ஜெளதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

கடந்த 2007-ஆம் ஆண்டு சம்ஜெளதா விரைவு ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது


கடந்த 2007-ஆம் ஆண்டு சம்ஜெளதா விரைவு ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது. அங்கு வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இந்த முடிவை நீதிமன்றம் எடுத்துள்ளது.
முன்னதாக, இந்த குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
தில்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு வாரம் இருமுறை சம்ஜௌதா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2007, பிப்ரவரி 18-ஆம் தேதி இந்த ரயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இரு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. ஹரியாணாவின் பானிபட் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில், 68 பேர் பலியாயினர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பான வழக்கில், ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், சுவாமி அஸீமானந்த் உள்ளிட்ட 8 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்தக் குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்பட்ட சுனில் ஜோஷி, கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் கொலை செய்யப்பட்டார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கில் இறுதி வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மார்ச் 11-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங் கடந்த 6-ஆம் தேதி தெரிவித்திருந்தார். ஆனால், இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த ரஹீலா எல் வகீல் என்ற பெண் கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ஜக்தீப் சிங் அப்போது தெரிவித்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தங்களை நீதிமன்றத்துக்கு வர அவர்கள் அனுமதிக்கவில்லை என்று என்ஐஏ வழக்குரைஞர் ராஜன் மல்ஹோத்ரா தன்னிடம் தகவல் தெரிவித்ததாக கூறிய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com